இணையத்திருட்டு; விசாரணைகளை விரைவுபடுத்த சிறிலங்கா ஜனாதிபதி உத்தரவு

இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணத்தை, மின்னஞ்சல் ஊடுருவல் மூலம் மோசடி செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய நிதி நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய பணம் இணையக் குற்றவாளிகளால் மறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பில் திறைசேரி அதிகாரிகள் இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாட்டின் நிதிப் பாதுகாப்பு குறித்து பரப்பப்படும் வதந்திகளை மறுத்துள்ள அவர், திருடப்பட்ட பணத்தை மீட்கும் பணிகள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை அரசாங்கம் கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு, அவுஸ்திரேலியாவின் ஏற்றுமதி நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தவணையைச் செலுத்தும் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திறைசேரிக்கும் அந்த அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கும் இடையே மின்னஞ்சல் வாயிலாகத் தகவல்கள் பரிமாறப்பட்ட போது, இணையக் குற்றவாளிகள் அந்தத் தகவல் பரிமாற்றத்திற்குள் ஊடுருவி, மின்னஞ்சல்களை ஹெக் செய்துள்ளனர். இதன் மூலம் உண்மையான கடன் வழங்குநருக்குச் சேர வேண்டிய பணத்தைத் தங்களது வங்கிக் கணக்குகளுக்கு மறித்து எடுத்துக்கொண்டுள்ளனர்.

இதேபோன்று இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையையும் திருடுவதற்கு இந்த ஹெக்கர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், வங்கிக் கணக்கு எண்களில் மாற்றம் இருப்பதை திறைசேரி அதிகாரிகள் ஆரம்பத்திலேயே கவனித்ததால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தெரிந்த உடனேயே திறைசேரி தரப்பிலிருந்து இலங்கை காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினி அவசரப் பதில் பிரிவிற்கு முறைப்படி புகாரளிக்கப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டன.

இந்த மோசடியில் திறைசேரி அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க, இரண்டு பிரதிச் செயலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்வாரியான விசாரணையும் நடத்தப்பட்டது.

அந்த விசாரணையின் அடிப்படையில், தகவல் பரிமாற்றத்தில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது தற்போது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாகச் சமூக வலைதளங்களிலும் எதிர்க்கட்சிகளாலும் பரப்பப்படும் தகவல்கள் அடிப்படையற்றவை. நாட்டின் நிதிப் பாதுகாப்பு சீர்குலைந்துவிட்டது என்றும், அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களின் கணக்குகளுக்குப் பணம் சென்றது என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.

இணையக் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், திருடப்பட்ட பணத்தை மீண்டும் மீட்பதற்குமான நடவடிக்கைகள் தற்போது மிக இரகசியமாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம் என்பதால், விசாரணைகள் முடியும் முன்னரே ஊடகங்களில் அதிகப்படியான தகவல்களை வெளியிடுவது குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வழிவகுக்கும் என்பதால் அரசு நிதானமாகச் செயல்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.  பொதுமக்கள் தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.