உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 3%க்கும் மேல் உயர்வு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானிய வெளிவிகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோரின் கடுமையான கருத்துக்களைத் தொடர்ந்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் வெள்ளிக்கிழமை (15) 3 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கப்பல் முடக்கத்தை நீக்குவதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடையும் என்ற அச்சமே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகும்.

ஒரு பீப்பாய் எண்ணெய் 3.54 டொலர்கள் (3.35%) உயர்ந்து 109.26 டொலராக  நிலைபெற்றுள்ளது. இந்த வார இறுதிக்குள், ஈரான் போரின் நிலையற்ற போர்நிறுத்தம் காரணமாக பிரெண்ட் எண்ணெய் 7.84% வரையும், WTI எண்ணெய் 10.48% வரையும் விலை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“அமெரிக்கா மீது எங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. வொஷிங்டன் உண்மையாக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குத் தயார். அதேநேரம், மீண்டும் போரிடவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்” என ஈரானிய அமைச்சர் அரக்ச்சி வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஈரான் விவகாரத்தில் எனது பொறுமை எல்லை மீறிச் செல்கிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதையோ அல்லது ஹோர்முஸ் நீரிணையை மூடுவதையோ அனுமதிக்க முடியாது என்பதில் சீன அதிபரும் நானும் உடன்பட்டுள்ளோம்” என்றார்.

இக்கருத்துப் பகிர்வைத் தொடர்ந்து, சந்தை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, உலகின் மொத்த எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (LNG) ஐந்தில் ஒரு பங்கு (1/5) இந்த ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது. சவூதி அரேபியா, ஈராக், கத்தார் போன்ற நாடுகளின் பிரதான ஏற்றுமதிப் பாதையாக இது விளங்குவதால், இதன் நீண்டகால முடக்கம் உலக அளவில் பெரும் எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும், புதன்கிழமை (13) இரவு முதல் ஈரானின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சுமார் 30 கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போருக்கு முந்தைய நாளாந்த சராசரியான 140 கப்பல்களை விடக் குறைவு என்றாலும், கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் சற்றே கூடுதல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களும் உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பதற்கு மற்றுமொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.