ஒட்டுமொத்த கட்சியின் நலனைவிட ஒரு சிலரின் சுயநலனே பிரதானமாக பார்க்கப் பட்டதால், பொன்விழா கண்ட அதிமுக மீண்டும் ஒரு அக்னிப் பரீட்சைக்கு ஆளாகி இருக்கிறது.
அதிமுக என்ற கட்சியை தொடங்க வேண்டும் என்று முதலில் எம்ஜிஆர் நினைக்கவில்லை. அவரது ரசிகர்கள் தான் திமுக-வில் அவருக்கு தரப்பட்ட நெருக்கடிகளை சகித்துக் கொள்ளமுடியாமல் மதுரையில் தாமரைக் கொடியை ஏற்றி அதிமுக-வுக்கு அடித்தளம் போட்டார்கள். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று 1972-ம் ஆண்டு அக்டோபரில் அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் தொடங்கினார். இன்றைக்கு விஜய் ரசிகர்கள் மீது எப்படி ‘தற்குறிகள்’ முத்திரை குத்துகிறார்களோ அதேபோல் அன்றைக்கு எம்ஜிஆர் ரசிகர்களை, ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’ என விமர்சித்தது திமுக.
எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள் திமுக-வுக்குள்ளேயே உட் கிளைகளாக இருந்ததால் அப்போது திமுக மேடைகளுக்கு பதில் மேடை போட்டு உடனுக்குடன் பதிலடி கொடுத்தார்கள். “ரத்தத்தின் ரத்தமே” என்று எம்ஜிஆர் சொன்னபோதெல்லாம், ஏதோ… தாங்களே கட்சிக்கு ரத்தம் கொடுத்ததைப் போன்று உணர்ந்தார்கள். இதனால் ஏகப்பட்ட நெருக்கடிகளையும் எதிர்கொண்டார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்.
மிகவும் தீவிரமாக இருந்த அவர்களில் சிலரை ஜெயிலில் இருந்த ரவுடிகளை பரோலில் எடுத்து பழிதீர்த்த சம்பவங்களும் நடந்தன. இதனால், திமுக-வும் அதிமுக-வும் என்றைக்குமே சந்திக்க முடியாத எதிரெதிர் துருவங்களாக மாறிப் போயின. அதிமுக-வினரும் திமுக-வினரும் பொது இடங்களில் கைகுலுக்கக் கூட தயங்கினார்கள்.
இத்தகையை நிலைப்பாடு தான் அதிமுக-வை முதல் தேர்தலிலேயே ஆட்சிக் கட்டிலிலும் அமரவைத்தது. அதிமுக-வுக்கு ஜெயலலிதா தலைமையேற்ற பிறகு இந்தப் போக்கு இன்னும் தீவிரமானது. ‘தீய சக்தி’ என்ற வார்த்தை பிரயோகத்தை ஜெயலலிதா சர்வ சாதாரணமாய் உபயோகித்தார்.
திமுக-வினருடன் அதிமுக-வினர் யாராவது தொடர்பில் இருப்பதாக தெரியவந்தாலே அவர்களை கட்சியைவிட்டு கட்டம் கட்டினார். மதுரையில் ஒரு திருமணத்தில் மு.க.அழகிரியும் செல்லூர் ராஜுவும் ஒன்றாக கலந்து கொண்டதாக வெளியான ஒரு போட்டோவை ஆதாரமாக வைத்தே ராஜுவை அமைச்சர் பதவியிலிருந்தே தூக்கியவர் ஜெயலலிதா.
திமுக-வுக்கும் அதிமுக-வுக்குமான ‘உறவு’ இப்படி இருக்கையில், இந்தத் தேர்தலில் அதிமுக-வை ஜெயிக்க வைக்க முடியாத பழனிசாமி, திமுக தயவில் அரியணை ஏற ஆசைப்பட்டதாகச் சொல்லி இன்னொரு பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள் சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.
கட்சியைவிட்டு பிரிந்து போனவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து அதிமுக-வை பலப்படுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தி வந்ததை உதாசீனப்படுத்தினார் பழனிசாமி. தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக வந்தால் இவை அனைத்தும் அவருக்கு எதிரான ஆயுதங்களாக திரும்பும், அதிமுக இன்னொரு பிளவைச் சந்திக்கும் என்று அப்போதே பேச்சுகள் எழுந்தன. அதுதான் இப்போது நடந்திருக்கிறது.
அதேசமயம், 2021 தேர்தலில் தோற்றாலும் அதிமுக-வை வலுவான எதிர்க்கட்சி நிலைக்கு கொண்டு வந்த பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகளில் கட்சியை கட்டுக்கோப்பாகவே வழிநடத்தினார். உள்ளடி வேலை பார்த்து கட்சியை பாஜக உடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே டெல்லி இழுத்த இழுவைக்கெல்லாம் சென்றவர், பலமான கூட்டணியைக் கட்டமைத்ததுடன் தனி ஆளாக தமிழகம் முழுமைக்கும் பிரச்சாரம் செய்தார். அதனால் தான் விஜய் அலையிலும் அதிமுக-வுக்கு கவுரமான தோல்வி கிடைத்திருக்கிறது. அதனால் தான் கட்சியும் இந்த நிமிடம் வரை அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்கிறது.
ஆனால், இந்தத் தோல்வியிலிருந்து தன்னை தலைநிமிர்த்திக் கொள்வதற்காக திமுக-வுடனும் கைகோக்க துணிந்த பழனிசாமி, அதற்குப் பிறகு அதிமுக என்ற கட்சி என்னாகும் என்று சிறிதும் சிந்திக்கவில்லை. ஆட்சிக்கு வந்துவிட்டால் அனைத்தையும் சமாளித்துவிடலாம் என வழக்கம் போல் அவர் கணக்குப் போட்டார். முதலில் இதற்கு மூச்சுவிடாமல் இருந்த முன்னாள் அமைச்சர்கள், பழனிசாமியின் முயற்சி பலனளிக்காது என்று தெரிந்து போனதும், தவெக ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாறினார்கள்.
பழனிசாமி திமுக-வுடன் கைகோக்க நினைக்கும் போது நாம் தவெக-வுக்கு ஆதரவளித்து அதிகாரத்தில் பங்கெடுப்பதில் என்ன தவறு என்று சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி போன்றவர்களும் சுயநலமாகவே யோசித்தார்கள். அதை வெளிப்படையாகச் சொல்லாமல், “அம்மாவால் தீய சக்தி என்று சொல்லப்பட்ட திமுக-வுடன் கைகோக்க பழனிசாமி திட்டமிட்டார். அதை ஏற்கமுடியாமல் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்” என்கிறார்கள். நான்கு நாட்கள் பழனிசாமி ஏற்பாட்டில் புதுச்சேரியில் தங்கி ‘சிந்தித்த’ பிறகு தான் இவர்களுக்கு இந்தத் ‘தெளிவு’ பிறந்திருக்கும் போலிருக்கிறது.
தொடர் தோல்விகளால் அதிமுக தொண்டர்கள் துவண்டுபோய்க் கிடக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருக்கும் நேரமில்லை. ஆளாளுக்கு சுயநலமாக சிந்தித்து கட்சியை ரெண்டுபடுத்திவிட்டு, “அதிமுக-வை உடைக்க வேண்டும் என்பது எங்களது எண்ணமில்லை” என்பவர்கள், “பொதுக்குழுவை கூட்டு” என்று போர்க்குரல் எழுப்புகிறார்கள். பதிலுக்கு, “கட்சி மாறி வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என சபாநாயகரிடம் மனு கொடுத்திருக்கிறது எதிர்தரப்பு. மொத்தத்தில், மீண்டும் நீதிமன்ற படி ஏறி நீதிகேட்கும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது அதிமுக.





