வனவாசல புகையிரத நிலையத்துக்கருகில் புகையிரதம் தடம்புரள்வு

வனவாசல புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் புகையிரத திணைக்களத்துக்கு சுமார் 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் முறையற்ற செயற்பாடுகளை தடுக்க பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

பயணிகள் புகையிரதம் வனவாசல புகையிரத நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வனவாசல புகையிரத நிலையத்தை  அண்மித்த பகுதியில் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதை அலட்சியப்படுத்த முடியாது. புகையிரத பாதைகள் நீண்டகாலமாக புனரமைக்காமல் இருப்பதால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாக குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

வனவாசல புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் புகையிரத திணைக்களத்துக்கு சுமார் 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. புகையிரத தண்டவாளத்தில் பொருத்தப்பட்டுள்ள ஆணிகளை போதைப்பொருளுக்காக திருடுவதை ஒரு தரப்பினர் தொழிலாக கொண்டுள்ளனர்.

களனி புகையிரத பாலத்திலும் கடந்த காலங்களிலும் இவ்வாறு ஆணிகளை திருடும் சம்பவங்கள் பதிவாகின. தற்போது அப்பகுதியில் புகையிரத திணைக்களத்தால் காவலாளி ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

புகையிரத பாதைகளில் ஆணிகளை அகற்றுவது பாரியதொரு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள புகையிரத நிலையத்திலோ முறைப்பாடளிக்க முடியும் என்றார்.