தமிழ் மக்களுடன் எமக்கு எவ்வித பகைமையும் கிடையாது. விடுதலை புலிகளுடன் தான் எமக்கு பிரச்சினை காணப்பட்டது.நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முப்படையினருக்கு என்றும் உயரிய கௌரவமளிப்போம்.அதேபோல் எக்காரணிகளுக்காகவும் முப்படையினரை விட்டுக்கொடுக்கமாட்டோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மல்வானை சொகுசு இல்லம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடையது என்று கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்றத்தின் ஊடாக தீர்க்கப்பட்டு அந்த இல்லத்தை அரசுடமையாக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் ஒரு தரப்பினர் அந்த இல்லத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு அங்கு கூடாரமிட்டுள்ளார்கள். இவர்களின் பின்னணியில் அரசாங்கம் உள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
மல்வானை இல்லம் பசில் ராஜபக்ஷவுடையது என்றால் நான் அங்கு கட்சி காரியாலயத்தை அமைத்திருப்பேன்.கடந்த காலங்களில் எம்மீது சுமத்திய சகல குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கம் நீதிமன்றத்தின் ஊடாக நிரூபிக்க வேண்டும்.அப்போது தான் எமக்கும் சுதந்திரமாக அரசியல் செய்ய முடியும்.
பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்தன.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த முப்படை வீரர்களை நினைவுக்கூற வேண்டும். அவர்களின் சேவையை கௌரவிக்க வேண்டும். இந்த அரசாங்கம் முப்படையினருக்கு முறையான இடத்தை வழங்கியுள்ளதா என்பது சந்தேகத்துக்கிடமாகவே உள்ளது.
தமிழ் மக்களுடன் எமக்கு எவ்வித பகைமையும் கிடையாது.அவர்கள் எமது உறவினர்கள். உலகளாவிய ரீதியில் மோசமான பயங்கரவாத அமைப்பாகவே விடுதலை புலிகள் அமைப்பு செயற்பட்டது. இந்திய பிரதமரும், எமது நாட்டின் அரச தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
விடுதலை புலிகள் அமைப்பின் செயற்பாடு முழு நாட்டுக்கும், உலகுக்கும் அச்சுறுத்தலாகவே காணப்பட்டது. அதனால் தான் அந்த அமைப்பை முற்றாக அழித்தோம்.இன்று நாட்டு மக்கள் அனைவரும் இன நல்லிணக்கத்துடன், சுதந்திரமாக வாழ்கிறார்கள். இந்த ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றையாட்சியையும் விட்டுக் கொடுக்க முடியாது என்றார்.





