வாகரை இந்துத் திருத்தலத்திற்குச் சென்று வழிபடச் சென்ற வேளையில், அந்தக் கோயிலின் குருக்கள் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றார். அதிலிருந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, பயங்கரவாதிகளால் அந்த குருக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எனக்குத் தெரியவந்தது. பயங்கரவாதத்தின் முன்னால் மதமும் இனமும் கூடத் தோற்றுப் போயின. நான் வேதனையடைந்தேன். பயங்கரவாதத்திற்கு எல்லைகள் இல்லை என்று நான் கூறியது இதனாலேயே ஆகும். அத்தகைய கொடூரமான பயங்கரவாதத்திற்கு கூட நாங்கள் மனிதாபிமான நடவடிக்கையின் மூலமே பதிலளித்தோம் . நான் ஒரு பெருமைமிக்க சிங்கள பௌத்தன். அப்படிக் கூறுவதற்கு நான் எவ்வகையிலும் தயங்க மாட்டேன். ஆனால் நான் ஒருபோதும் ஒரு இனவாதி அல்ல. ஒரு தரப்பினர் அவ்வாறு சித்தரித்து அரசியல் லாபம் பெற முயல்வது வருத்தத்திற்குரியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் எவ்வளவு காலம் கடந்தாலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்த குழுக்கள் பல்வேறு வடிவங்களில் நமது தாய்நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். நமது தாய்நாட்டின் ஒற்றையாட்சிக்காகவும், இராணுவத்தினரின் பிள்ளைகளுக்காகவும் முன்னிற்பதற்கான வாய்ப்பு எனக்கு இன்னும் எவ்வளவு காலம் கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது. எதிர்காலத்தில் ஒரு நாள் என்னை மறந்துவிடலாம். ஆனால் அனைவரும் அந்த வீரமிக்க இராணுவ பிள்ளைகளை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நான் ஜனாதிபதியாகப் பதவியேற்று 08 நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற விடுதலைப் புலிகள் நினைவேந்தல் நாளில், பயங்கரவாதத் தலைவர் பிரபாகரன் ஆற்றிய நினைவேந்தல் உரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. புதிய அரசாங்கம் தங்களது கோரிக்கைகளுக்கு இடமளிக்காமல் கடுமையான கொள்கையைக் கடைப்பிடித்தால், தாங்கள் ஒரு தன்னாட்சியை நிறுவுவோம் என்பதே அந்த உரையின் பிரதான அம்சமாக இருந்தது.
2006 ஆம் ஆண்டின் நடுபகுதியளவில் நாங்கள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, ஒரு அரசாங்கமாக அமைதிச் செயல்முறையை முன்னோக்கி கொண்டு சென்றோம். எனினும், பயங்கரவாதிகள் வழக்கம் போல் அமைதிச் செயல்முறையை ஒரு போர்வையாகப் பயன்படுத்தி தங்களது பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்தனர். அவர்கள் இராணுவ வாகனங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தி இராணுவ வீரர்களைக் கொலை செய்தனர். எல்லைக் கிராமங்களைத் தாக்கி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களைக் கொலை செய்தனர். கடற்புலிப் படகுகள் மூலம் இராணுவ படகுகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இறுதியாக கெபிதிகொல்லாவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் நிறைந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது குண்டுத் தாக்குதல் நடத்தி ஒரு பாரதூரமான குற்றத்தைச் செய்தனர். அந்தத் தாக்குதலில் அப்பாவி பச்சிளம் குழந்தைகள், பொதுமக்கள், கிராமப் பாதுகாப்புப் படையினர் உட்பட பெருமளவிலானோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அன்று அவர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்றும் என் நினைவில் மாறாமல் உள்ளது. அதன் பின்னர், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அன்றாட நுகர்வு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மாவிலாறு அணைக்கட்டின் மதகுகளை பயங்கரவாதிகள் மூடியதால்இ மக்கள் மீண்டும் துயரங்களைச் சந்தித்தனர். இத்தகைய மனிதாபிமானமற்ற காரணங்களால் மக்கள் அநாகரீகமான முறையில் ஒடுக்கப்படுவதை என்னைப்போன்ற ஒரு ஜனாதிபதியால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.தாங்கும் எல்லையும் பொறுமையின் எல்லையும் முடிவுக்கு வந்தன.
நாங்கள் போரிட்டது உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிராகவே ஆகும். ஒரு சண்டை அல்லது போருக்கு விதிகள், நிபந்தனைகள் மற்றும் தார்மீக எல்லைகள் உள்ளன. ஆனால், எல்.டி.டி.ஈ பயங்கரவாதத்திற்கு அந்த எல்லைகள் எதுவும் பொருந்தவில்லை. பல வருடங்களாக நீங்களும் நானும் அதை அனுபவித்திருக்கிறோம். ஸ்ரீ மகா போதி வளாகத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த அப்பாவி மனிதர்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை. அவர்கள் போர் செய்யவில்லை.அரந்தலாவையில் பிக்குகள் போர் செய்யவில்லை. ஆனால் பயங்கரவாதிகள் அவர்களை மிகவும் காட்டுமிராண்டித்தனமாகக் கொலை செய்தனர். இரவில் கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த மக்களை வெட்டிக் கொலை செய்தனர்.துப்பாக்கிச் சத்தம் கேட்டால் அருகில் உள்ள முகாம்களில் இருக்கும் பாதுகாப்புப் படையினர் வந்துவிடுவார்கள் என்பதால், கூர்மையான வாள்கள் மற்றும் கத்திகள் போன்ற ஆயுதங்களால் அப்பாவி நிராயுதபாணி மனிதர்களை வெட்டிக் கொன்றனர்.
கோனகல கிராமத்தில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட கிராம மக்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட பெண்களும் சிறிய குழந்தைகளும் இருந்தனர். இத்தகைய சோகமான உதாரணங்களை எமது வரலாறு முழுவதும் காண முடிந்தது.அக்காலத்தில் எல்.டி.டி.ஈ அமைப்பு தங்களது பாதுகாப்பிற்காக மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய அப்பாவித் தமிழ் பொதுமக்களுக்காக உணவுகளையும் மருந்துப் பொருட்களையும் அந்தப் பகுதிகளுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.
பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போதும், அந்தப் பகுதிகளை மீட்டெடுக்கும் போதும் எமது இராணுவ வீரர்களுக்கு பெரும் அர்ப்பணிப்பைச் செய்ய வேண்டியிருந்தது. ஒருமுறை அவ்வாறு பெருமளவிலான பொதுமக்கள் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அந்த விஜயத்தின் போது நான் வாகரை இந்துத் திருத்தலத்திற்குச் சென்று வழிபடச் சென்ற வேளையில், அந்தக் கோயிலின் குருக்கள் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றார். அதிலிருந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, பயங்கரவாதிகளால் அந்த குருக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எனக்குத் தெரியவந்தது. பயங்கரவாதத்தின் முன்னால் மதமும் இனமும் கூடத் தோற்றுப் போயின. நான் வேதனையடைந்தேன்.
பயங்கரவாதத்திற்கு எல்லைகள் இல்லை என்று நான் கூறியது இதனாலேயே ஆகும். ஆனால், அத்தகைய கொடூரமான பயங்கரவாதத்திற்கு கூட நாங்கள் மனிதாபிமான நடவடிக்கையின் மூலமே பதிலளித்தோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நீங்களும் நானும் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சிலும் அந்த இராணுவ பிள்ளைகளை மரியாதையுடன் நினைவுகூர வேண்டும். நான் ஒரு பெருமைமிக்க சிங்கள பௌத்தன். அப்படிக் கூறுவதற்கு நான் எவ்வகையிலும் தயங்க மாட்டேன். ஆனால் நான் ஒருபோதும் ஒரு இனவாதி அல்ல. ஒரு தரப்பினர் அவ்வாறு சித்தரித்து அரசியல் லாபம் பெற முயல்வது வருத்தத்திற்குரியது.
தெற்கைப் பாதுகாத்த நான் வடக்கையும் பாதுகாப்பது இனவாதம் என்றால், வடக்காக இருந்தாலும் சரி தெற்காக இருந்தாலும் சரி இந்த நாட்டின் குடிமக்களாகிய எனது மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுவது இனவாதம் என்றால், சிங்களக் குழந்தையைப் போலவே நமது தமிழ் குழந்தையையும் பாதுகாப்பது இனவாதம் என்றால், உள்கட்டமைப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்கி வடக்கிற்கு வசந்தத்தைக் கொண்டு செல்வது இனவாதம் என்றால், ஆம் இந்த மஹிந்த ராஜபக்ஷ ஒரு கடுமையான இனவாதிதான். நான் தெற்கைப் பாதுகாத்துக் கொண்டே வடக்கிற்குச் சென்றேன். வடக்கையும் கிழக்கையும் பாதுகாத்தேன். எனது சொந்த மக்கள் தெற்கிற்கு வருவதையும், தெற்கு மக்கள் வடக்கிற்குச் செல்வதையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். வடக்கையும் தெற்கையும் பிரிக்காமல், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான புகையிரத பாதையை மீண்டும் திறந்து, 24 வருடங்களுக்குப் பிறகு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ‘யாழ் தேவி’ புகையிரதத்தின் முதல் பயணியாக வடக்கிற்குச் சென்றது இந்த சிங்கள பௌத்த மஹிந்த ராஜபக்ஷதான். அது எனது சொந்த சகோதர மக்களைப் பார்ப்பதற்காகவே ஆகும்.
இன்னும் எவ்வளவு காலம் கடந்தாலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்த குழுக்கள் பல்வேறு வடிவங்களில் நமது தாய்நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். நமது தாய்நாட்டின் ஒற்றையாட்சிக்காகவும், அன்பிற்குரிய இராணுவத்தினரின் பிள்ளைகளுக்காகவும் முன்னிற்பதற்கான வாய்ப்பு எனக்கு இன்னும் எவ்வளவு காலம் கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது. எதிர்காலத்தில் ஒரு நாள் நீங்கள் என்னை மறந்துவிடலாம். ஆனால் நீங்கள் அனைவரும் அந்த வீரமிக்க இராணுவ பிள்ளைகளை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இந்தக் கௌரவமான நாளில் இறுதியாக நான் உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். போரிடுவதற்கு நான் எடுத்த தீர்மானம் அனைத்திற்கும் தயாராகவே ஆகும். அரசியல் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எனக்கு எதிராக விரல்கள் நீட்டப்படும் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். உயிரால் கூட நஷ்டஈடு செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நான் புரிந்து வைத்திருந்தேன். அது எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. பழிச்சொற்களும் அவதூறுகளும் மஹிந்தவிற்கு நன்கு பழகியவைதான். ஆனால் நீங்கள் தெளிவாக நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. நாம் போரிட்டது தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல. நாம் போரிட்டது பயங்கரவாதத்திற்கு எதிராகவே ஆகும். யார் எப்படிச் சொன்னாலும் நாம் உங்களைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்டோம். நம்மால் அதிகமாக மீட்கப்பட்டதும் தமிழ் மக்களே ஆவர். முல்லைத்தீவு நந்திக்கடல் ஏரிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் எல்.டி.டி.ஈ பயங்கரவாதிகள் முடக்கப்பட்டிருந்த போது, அவர்கள் அந்தத் தமிழ் மக்களை ஒரு மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர்.
பிணைக் கைதிகளாக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான தமிழ் மக்களை மீட்ட உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டது எனது வீரமிக்க இராணுவமே ஆகும். போரின் இறுதிச் சில மணித்தியாலங்களில் கூட உங்களைப் பயங்கரவாதிகளின் கனரக ஆயுதத் தாக்குதல்களிலிருந்து மீட்டது எமது வீரமிக்க இராணுவமே ஆகும். உங்கள் குழந்தையைத் தனது கைகளில் ஏந்தியது எனது இராணுவ பிள்ளைகளே ஆகும். மனதில் இருந்த பயத்தையும், காயங்களால் ஏற்பட்ட உடல் வேதனையையும், பசியையும் போக்கியது மனிதநேயத்தை இதயத்தில் தாங்கிய நமது நாட்டின் மனிதாபிமான இராணுவமே ஆகும். அந்த நாளே என் வாழ்க்கையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்த நாளாகும். மஹிந்த ராஜபக்ஷ ஆகிய எனக்கு அந்த நினைவும் மகிழ்ச்சியும் மட்டுமே போதுமானது என்றுள்ளது.





