பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் ஒடுக்கினால் கூட்டு எதிர்க்கட்சியாக, ஜனநாயக ரீதியில் நடவடிக்கை எடுப்போம்

அரசாங்கம் பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் ஒடுக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் கூட்டு எதிர்க்கட்சியாக நாங்கள் அதற்கு எதிராக எடுக்க முடியுமான அனைத்து ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி இன்று (18) கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டின் ஜனநாயக தூண்களான நீதித்துறை, பாராளுமன்றம் மற்றும் நிறைவேற்றுத்துறை ஆகிய மூன்று துறைகளும் இன்று அரசியல் மயமாக்கப்பட்டிருப்பதை நாங்கள் காண்கிறோம். குறிப்பாக அமைச்சர் லால்காந்த அண்மையில் ஒரு பொது இடமொன்றில் உரையாற்றுகையில், எமது அரசாங்கம் அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொண்டாலும் இன்னும் அரச அதிகாரம் எங்களுக்கு கிடைக்கவில்லை. அது தேவை என தெரிவித்திருந்தார். அதேபோன்று ஜனாதிபதி மே தின கூட்டத்தின்போது, நீதிமன்ற தீர்ப்பொன்று தொடர்பில் குறிப்பிட்டு, அந்த தீர்ப்பு வரும்போது, அனைவரும் கை தட்ட தயாராக இருங்கள் என தெரிவித்திருந்தார். இவர்களின் இந்த கூற்று ஜனநாயகத்துக்கு பாரிய நெருக்கடியை கொடுப்பதாக அமைந்துள்ளதாவே நாங்கள் நம்புகிறோம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேநேரம் நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்கிறது. நாட்டின் பணவீக்கம் 5.6 வீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் இது தொடர்பில் மத்திய வங்கி பாராளுமன்றத்துக்கு அறிவித்திருக்க வேண்டும். ஏனெனில், 2024 ஆரம்பத்தில் இலங்கை மத்திய வங்கியை நாங்கள் சுயாதீன நிறுவனமாக நாங்கள் மாற்றினோம். அதன் பிரகாரம் நாட்டின் பணவீக்கத்தை 5 சதவீத்துக்கு குறைவாக வைத்திருக்க வேண்டும் என்ற பொறுப்பு மத்திய வங்கி ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அதனால் மத்திய வங்கி ஆளுநர் நாட்டின் பணவீக்கம் 5 சதவீதத்துக்கும் அதிகம் அதிகரித்துள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன் . இதற்கு காரணம் மின் கட்டணம் 18 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் வலயத்தில் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யும் நாடாக நாங்கள் இருக்கிறோம். அதனாலே எமது உணவு பணவீக்கத்தைவிட சேவை மற்றும் உற்பத்தி பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதனாலே டொலரின் பெறுமதி தற்போது  331 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்து செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது. அதேநேரம் என்.டி.பி. வங்கியின் 13,2 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றிருக்கிறது. அவுஸ்திரேலியாவுக்கு வழங்கவேண்டிய 2.5 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளது.இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்காவுக்கு வழங்கவேண்டிய 6இலட்சம் டொலர் காணாமல் போயுள்ளது. இதுபோன்று இன்னும் பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவை தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

எனவே அரசாங்கம் பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் ஒடுக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லாவிட்டால் கூட்டு எதிர்க்கட்சியாக நாங்கள் அதற்கு எதிராக எடுக்க முடியுமான அனைத்து ஜனநாயக ரீதியிலான் நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றார்.