கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை (18) மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிலரது தகாத செயற்பாடுகளால் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். கடற்கரை வீதியில் பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையிலும், சிங்கள அமைப்புகளைச் சேர்ந்த சிலர் அங்கு குழப்பம் விளைவிக்க முயன்றனர்.
அவர்கள் கடற்கரையில் கூடி, நிகழ்வில் பங்கேற்ற மக்களை நோக்கித் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நினைவேந்தல் நடைபெறும் இடத்துக்குள் நுழைய முயன்ற நபர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக குறிப்பிடப்படுகிறது.
கடற்கரை பகுதியில் இடம்பெற்ற நினைவேந்தலின்போது ஏற்பட்ட குழப்பம் காரணமாக வெள்ளவத்தை கடற்கரை வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










