மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் படகில் மீன் பிடிக்க சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று (25) திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல் முன்னெடுத்துக்கொண்டிருந்த மீனவர்களினால் மீட்கப்பட்டு களுதாவளைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை (23) மீனவர் ஒருவர் கடலுக்கு சென்று காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை (24) முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ள நிலையில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை தேடும் பணிகளில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும் அதில் அவர் இல்லாமல் போயிருந்த நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கல்முனைக்குடிக்கும் கல்முனைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அவரது சடலம் மிதத்ததை கண்டு மீனவர்கள் அதனை மீட்டுவந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலத்தினை விசாரணைகளை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர். இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் குடும்பத்தினரால் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





