இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு புகழ் வணக்கம்!

தமிழ் மண்ணின் மண்வாசனையையும், கிராமத்து மக்களின் வாழ்க்கை உண்மைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் வெள்ளித்திரையில் உயிரோட்டமாகப் பதித்த கலை உலகின் மாமேதை, இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் இயக்கம் தனது ஆழ்ந்த மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைவர் தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் அருட்பணி. து. ஜோசப்மேரி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாரதிராஜா அவர்கள் ஒரு திரைப்பட இயக்குநர் மட்டுமல்லர். அவர் ஒரு பண்பாட்டு அடையாளம். தமிழ் சமூகத்தின் வாழ்வியல், காதல், போராட்டம், உறவுகள், மண்ணின் பெருமை ஆகியவற்றை தனது படைப்புகளின் மூலம் தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்ற ஒரு கலைப் போராளி.

தமிழ் இனத்தின் உரிமைகள், தமிழர் அடையாளம் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் வெளிப்படுத்திய உறுதியான குரல், தமிழ் மக்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும். கலைஞராக மட்டுமன்றி, தமிழர் நலனுக்காக அக்கறை கொண்ட சமூகப் பொறுப்புள்ள தமிழராகவும் அவர் திகழ்ந்தார்.

தேசியத்தலைவரை நேரில் சந்தித்த இயக்குநர் இமயம் அவர்கள் “தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனை கண்டேன் ” என்று உலகத்திற்கே அறிவித்தார். ஈழத் தமிழர் விடுதலையில் தீராத அவா கொண்ட இவரின் மறைவு ஈழ தமிழினத்திற்கும், உலக தமிழினத்திற்கும் பேரிழப்பாகும்.

அவரது கலைப் பயணம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் அழியாத தடமாகும். அவர் உருவாக்கிய படைப்புகளும், அவர் விதைத்த சிந்தனைகளும், வருங்கால தலைமுறைகளுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க கலைச் சேவையை நன்றியுடன் நினைவுகூரும் இந்நேரத்தில், அவருக்கு எமது இதயபூர்வமான புகழ் வணக்கத்தைச் செலுத்துகின்றோம்.

“மண்ணின் மணத்தை திரையில் விதைத்த கலைஞர்; தமிழின் ஆன்மாவை உலகிற்கு எடுத்துச் சென்ற படைப்பாளர்; அவரது பெயரும் புகழும் தலைமுறைகளைத் தாண்டி நிலைத்திருக்கும்.”

பாரதிராஜா அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கலை உலகினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றுள்ளது.