சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதிக்காமல் நிலையியற் கட்டளைகளை மீறி செயற்பட்டதாலே அதற்கு எதிராக செயற்பட எதிர்க்கட்சிக்கு ஏற்பட்டது. நீதிமன்ற சுயாதீனத்தில் யாராவது தலையீடு செய்ய முற்யற்சிததால், அது இந்த நாட்டின் ஜனநாயகத்தின் இறுதிப்பயணமாக அமையும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற சேர் பெறுமதி வரி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் நீதித்துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி தொடர்பில் அவசர விவாதம் ஒன்றை நாங்கள் நிலையியற் கட்டளை 19 (1) கீழ் கேட்டிருந்தோம். அதனை வழங்குவதற்கு சபாநாயகருக்கு பூரண அதிகாரம் இருக்கிறது. ஆனால் சபாநாயகர் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல் வாக்கெடுப்புக்கு செல்ல தீர்மானித்தார். 19 (1) க்கு வாக்கெடுப்புக்க செல்ல, நிலையியற் கட்டளையில் எந்த அதிகாரமும் இல்லை. அதனால் சபாநாயர் நிலையியற் கட்டளைக்கு எதிராக செயற்பட்டதாலே, எங்களுக்கு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டி ஏற்பட்டது.
அதேநேரம் இன்று நீதிமன்ற சுயாதீனம தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த நீதிமன்றங்களில் வெற்றிடம் ஏற்படும்போது, பொதுவாக ஜனாதிபதி அந்த வெற்றிடங்களுக்கு உடனடியாக நியமிப்பார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் இந்த நீதிமன்றங்களில் இடம்பெற்றுவரும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இவ்வாறு வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதன் மூலம் அந்த துறையில் இருப்பவர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது ஜனாதிபதி இந்த வெற்றிடங்களை காண்பித்துக்கொண்டு, நீதிமன்ற நடவடிக்கைகளை தனக்கு தேவையான முறையில் மேற்கொள்ள முயற்சிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. அது நியாயமான சந்தேகமாகும். ஏனெனில் நீதிமன்ற வெற்றிடங்களை யாரும் இந்தளவு காலம் வைத்துக்கொண்டிருப்பதில்லை. கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதிலும் ஜனாதிபதி 9 மாத காலம் இழுத்தடிப்பு செய்துவந்தார். ஜனாதிபதி தனக்கு தேவையான ஒரு கணக்காய்வாளர் நாயகத்தை நியமித்துக்கொள்ளவே முயற்சித்துவந்தார். ஆனால் அரசியலமைப்பு பேரவை அதனை தொடர்ந்து நிராகரித்து வந்தது. இறுதியாக கணக்காய்வாளர் காரியாலயத்தில் இருந்து ஒருவரை நியமிக்கவேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டது.
அதேபோன்று தற்போது உயர் நீதிமன்றங்களில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடங்களுக்கு ஜனாதிபதிக்கு தேவையானவர்களை நியமித்துக்கொள்ளவா, பல மாதங்கள் கடந்தும் நியமிக்காமல் இருக்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது. அதனையே நாங்கள் வெளிப்படுத்துகிறோம். அத்துடன் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதித்துறைக்கு மாத்திரம் ஏன் வயதெல்லையை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படியானால் உயர் நீதிமன்றங்களில் இருக்கும் நீதிபதிகளுக்கு அரசாங்கம் லஞ்சம் வழங்கவே முயற்சிக்கிறது. அவர்களை திருப்திப்படுத்தி, தங்களுக்கு தேவையான தீர்ப்புகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள். எனவே நீதிமன்ற சுயாதீனத்தில் யாராவது தலையீடு செய்ய முற்யற்சிததால், அது இந்த நாட்டின் ஜனநாயகத்தின் இறுதிப்பயணமாக அமையும் என்றார்.





