சட்டப்பேரவையில் நிறைவு நாளான நேற்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் பேசியதற்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது, ‘கட்சிநிதி’ என்ற பெயரில் அடித்த கொள்ளையெல்லாம் ஒவ்வொன்றாக இப்போது அரசின் கஜானாவுக்கு கொண்டு சேர்த்து வருவதாக முதல்வர் குறிப்பிட்டார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச வாய்ப்பு கேட்டார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பதிலுக்கு தவெக உறுப்பினர்களும் எழுந்து கூச்சலிட்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்: முதலில் முதல்வர் பேசி முடிக்கட்டும். நீங்கள் கூறியபடி அதில் ஆதாரமற்றவை இருந்தால்ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பேன்.
அவர் பேசி முடித்ததும் எதிர்க்கட்சி தலைவர்பேசுவதற்கு வாய்ப்பு தருவேன். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: நேற்று நான் பேசும்போது, சில அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசினார்கள். அதற்கு அனுமதி கொடுத்தீர்கள். இன்று முதல்வர் பேசும்போது சில தவறான வார்த்தைகளைக் கூறுகிறார்.
கட்சி நிதி என்று சொல்லியுள்ளார். அதேநேரம், எந்த கட்சி என சொல்லவில்லை என்கிறார் அமைச்சர். தைரியம் இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எதையும் ஆதாரத்தோடு பேசுங்கள்.
நான் நேற்று பேசி முடித்த பிறகு, அவை முடிந்துவிட்டதாக சொன்னீர்கள். நாங்கள் வீட்டுக்குச் சென்று டி.வி.யைப் போட்டு பார்த்தால் ஒரு அமைச்சர் இன்னும் பதில் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.
இது என்ன மரபு? முதல்வர் பேசும்போது நாங்கள் அமைதியாக கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். ஆனால், அவர் சில கருத்துகளை பேசும்போது அதை அனுமதிக்க முடியாது.
பேரவைத் தலைவர்: முதல்வரின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லையெனில் ஆய்வு செய்து நீக்கப்படும். இவ்வாறு வாக்குவாதம் நடைபெற்றது. இதையடுத்து முதல்வர் விஜய் பேசத் தொடங்கியதும், அவர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதி தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.





