பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.
இயக்குநர் கே.பாக்யராஜ் 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் நடந்த நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை திரும்பிய அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பாக்யராஜ் உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் விஜய், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா வுக்கு ஆறுதல் கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு, விசிக தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மநீம தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், பிரபு, விக்ரம்பிரபு, ஜெயராம், சார்லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி,இயக்குநர்கள் மணிரத்னம், பார்த்திபன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு, பாண்டியராஜன், சமுத்திரக்கனி, ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன். சந்தானபாரதி, இசை அமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாக்யராஜின் திரைப்படக் காட்சிகள், பிரபல வசனங்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது நினைவுகளை சோகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். பாக்யராஜ் மறைவையொட்டி முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசை அமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே.பாக்யராஜின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகுக்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனித நேயம் மற்றும் சமூக விழுமியங்களைப் பேசும்; காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரைஉலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.





