கிராம மக்களின் ஆதரவுடன் மீண்டும் விகாரைக்கு அழைத்து வரப்பட்டார் இராஜாங்கனை சத்தாரதன தேரர்

தாக்குதல் சம்பவங்கள் மற்றும் கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக விகாரையை விட்டு வெளியேறி, தனது சகோதரரின் இல்லத்தில் தஞ்சமடைந்திருந்த இராஜாங்கனை சத்தாரதன தேரரை, கிராம மக்கள் பேருந்துகளில் திரண்டு சென்று மீண்டும் விகாரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

விகாரைப்பணி சபையினர் மற்றும் கிராம மக்களது தடையையும் மீறி, உயிருக்கு ஏற்பட்ட பயம் காரணமாகவே தான் தற்காலிகமாக வெளியேறியிருந்ததாக இராஜாங்கனை சத்தாரதன தேரர் திங்கட்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

தேரர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘விகாரையில் தனியாக இருந்து சமூக ஊடகப் பணிகளைச் செய்து வந்த என் மீது, பிரபல வர்த்தகர் மற்றும் வன்முறைக் கும்பலினர் திட்டமிட்டு இரண்டு முறை தாக்குதல் நடத்த முற்பட்டனர். அண்மையில் இரவு 10.30 மணியளவில் முகம் தெரியாத குழுவினர் என்னை விகாரைக்குள் புகுந்து கொலை செய்ய முயன்றனர். முதலாம் நாள் வந்த ஒருவர் கைது செய்யப்பட்டாலும், இதன் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் இன்னும் சுதந்திரமாகவே நடமாடுகின்றனர். எனவே, பொலிஸ்மா அதிபர் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு அவர்களைக் கைது செய்ய வேண்டும்.

நாம் துறவிகள் என்ற ரீதியில் பழிவாங்க நினைப்பதில்லை. ஆனால், இன்று எனக்கு நடந்த கொடுமை நாளை மற்றுமொரு துறவிக்கும் நேரலாம். நான் விகாரைக்குச் சென்று பணம் சம்பாதிக்கத் துறவறம் பூணவில்லை. எனது தந்தை இரு கண்களும் தெரியாதவர், தாய் விவசாயம் செய்து எங்களை வளர்த்தாள். ஏழையாக இருந்தாலும் எவ்வித இலாப நோக்கமும் இன்றி எனது முழு வாழ்க்கையையும் சாசனத்துக்காகவும் நாட்டு மக்களுக்காகவுமே தியாகம் செய்துள்ளேன்.

தற்போது எனது இரு முதன்மை சமூக ஊடகக் கணக்குகளும் தீயவர்களால் முடக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டன. என்னிடம் தற்போது எஞ்சியிருப்பது இந்தத் துறவற ஆடை மட்டும்தான். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் வேறு வழியின்றி எனது சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்தேன். இன்று எனது விகாரைபணி சபையினர் எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளனர். அவர்களின் வார்த்தைகளை நம்பியே, இன்று எனது கிராம மக்களுடன் மீண்டும் விகாரைக்கு எழுந்தருளத் தீர்மானித்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

இது குறித்து கிராமவாசிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

‘கடந்த 20 வருடங்களாக எமது கிராமத்துக்கும் ஏழை மக்களுக்கும் தேரர் ஆற்றிய சேவைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காட்டுயானைகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக வீதிகளில் போராடியதுடன், முறையற்ற மதுபானம் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராகவும் துணிச்சலுடன் களமிறங்கினார். தனக்கென சொத்துக்களைச் சேர்க்காமல், தனக்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு 10 முதல் 15 பிள்ளைகளைக் கொண்ட ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். அச்சுறுத்தல்கள் அதிகரித்த போது நாங்கள் கவலைப்பட வேண்டாம் எனக் கூறியதற்கு, ‘அப்படிப் பார்க்க முடியாது தாயே, இவர்கள் ஏழை மக்கள், இவர்களுக்காகத்தானே நான் உழைக்கிறேன்’ என அவர் கூறினார். இந்த உன்னத துறவியைக் காப்பது எமது கடமையாகும்’ எனத் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகள்