ஜன்னல் வழியாகத் துப்பாக்கியை உள்ளே நுழைத்துக் கைதிகள் மீது சுடுவதை எந்தவொரு மனித உரிமைகள் சட்டப்படியும் நியாயப்படுத்த முடியாது!

சிறைச்சாலையின் நுழைவாயில் ஜன்னல் வழியாகத் துப்பாக்கியை உள்ளே நுழைத்துக் கைதிகள் மீது சுடுவதை எந்தவொரு மனித உரிமைகள் சட்டப்படியும் நியாயப்படுத்த முடியாது என மக்கள் போராட்ட முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைகள் குறித்து விளக்குவதற்காக நுகேகொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலை அசம்பாவிதத்தினால் இதுவரையில் 26 மரணங்கள் பதிவாகியுள்ளன. மரணித்தவர்களுள் 7 பேர் நிறைச்சாலை அதிகாரிகள் ஆவர்.

சிறைச்சாலைகளின் இடநெருக்கடியே இவ்வாறான வன்முறைகளுக்குப் பிரதான காரணமாகும். இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய அதிகபட்ச எண்ணிக்கை 11,762 ஆக உள்ள போதிலும், தற்போது 41,257 க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் 680 கைதிகளையே தடுத்து வைக்க முடியும் என்ற போதிலும், சம்பவத்தின் போது அங்கு 2,417 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

வருடமொன்றுக்கு சுமார் 2,00,000 பேர் வரை கைது செய்யப்படுவதால் அதிகாரிகள் கடும் பணி அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கைக்குப் பெருமளவில் போதைப்பொருளைக் கொண்டு வருவது 5 பிரதான பெருவர்த்தகர்களே என்று பாதுகாப்புப் பிரிவினரே கூறுகின்றனர்.

அந்த முதலாளிமார்களைக் கைது செய்யாமல், சாதாரண மக்களைச் சிறையில் அடைப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.

இச்சம்பவத்தின் போது மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் பிரித்து வைப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு அதிகாரி சிறைச்சாலை நுழைவாயில் ஜன்னல் வழியாகத் துப்பாக்கியை உள்ளே நுழைத்துச் சுட்ட சம்பவத்தை எவராலும் நியாயப்படுத்த முடியாது. இது குறித்து அரசாங்கம் உடனடியாக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

அரசாங்கமும் சிறைச்சாலைகள் அமைச்சரும் வெறும் வார்த்தைகளால் பொறுப்பேற்பதாகக் கூறுவதனால் பிரச்சினை தீராது. மீண்டும் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்படுவதைத் தடுப்பதற்கும், இடநெருக்கடியைத் தீர்ப்பதற்கும் எடுக்கவுள்ள தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

இன்று இந்தத் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முற்பட்டால், நாளை பொதுவெளியில் மனிதர்களை நீதிமன்ற விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லும் அராஜக நிலைமை உருவாகும். எனவே, கைதிகளின் மனித உரிமைகள் குறித்து சமூகம் இன்னும் மனிதாபிமானத்துடன் சிந்திக்க வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகள்