விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா நட்டஈட்டை மேன் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது

“நெத்த வெனுவட்ட எத்த” (இல்லாததற்குப் பதிலாக உண்மை) என்ற புத்தகத்தை அச்சிட்டதன் மூலம் புலமைச் சொத்து சட்டத்தை மீறிய குற்றத்துக்காக, டில்வின் சில்வாவுக்கு 1 மில்லியன் (10 இலட்சம்) ரூபா  பணத்தை நட்டஈடாக  செலுத்துமாறு கொழும்பு  வணிக மேல் நீதிமன்றம் முன்னாள்அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு விதித்த உத்தரவை  மேன் முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (9) உறுதி செய்துள்ளது.

நீதிபதிகளான  ஜனக் டி சில்வா, ஷிரான் குணரத்ன மற்றும் சம்பத் கே.பி. விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட இப்புத்தகத்தில், டில்வின் சில்வா  மக்கள் விடுதலை முன்னனி கட்சியில் இருந்தபோது கட்சியின் செயற்குழுவுக்கு  முன்வைத்த கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள்  ஆகியனவும் இணைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தனது   புலமை சொத்துரிமை மீறப்பட்டுள்ளதாகக் கூறி டில்வின் சில்வா தொடர்ந்த வழக்கை விசாரணை செய்த கொழும்பு வணிக  மேல் நீதிமன்றம், இப்புத்தகத்தின் உண்மையான உரிமை டில்வின் சில்வாவுக்கே உரியது என 2019 ஜனவரியில் தீர்ப்பளித்து, நட்டஈடு  செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தது.

இநிலையில் குறித்த தீர்ப்புக்கு  எதிராக விமல் வீரவன்ச தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த நீதிபதி  ஷிரான் குணரத்ன, கொழும்பு வணிக  மேல் நீதிமன்றம்   இழப்பீடு செலுத்துமாறு தெரிவித்த உத்தரவி்ல், மேன் முறையீட்டு நீதிமன்றம் தலையிடாது என தனது தீர்மானத்தை அறிவித்திருந்தார். அத்துடன், புத்தகத்தில் உள்ள டில்வின் சில்வாவுக்குச் சொந்தமான ஜே.வி.பி ஆவணங்களை மீண்டும் அச்சிட்டு விநியோகிக்கவும்,  விற்பனை செய்யவும்  விமல் வீரவன்சவுக்கு  மேன் முறையீட்டு  நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இவ்வழக்கில் டில்வின் சில்வா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், விமல் வீரவன்ச சார்பில் சட்டத்தரணி நிஷான் பிரேமதிலகவும் முன்னிலையாகியிருந்தனர்.