சொத்துக்களை முடக்கும் அதிகாரத்தை நீதிமன்றத்துக்கு வழங்குங்கள்!

பணத்தூயதாக்கல் சட்டத்தின் பிரகாரம் எவரேனும் ஒருவரின் சொத்தை முதல் கட்டமாக 14 நாட்களுக்கும், இரண்டாம் கட்டமாக 21 நாட்களுக்கும் முடக்க பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்படும். நீதிமன்றத்தின் அனுமதியை கூட பெறவேண்டிய அவசியம் இல்லை. பொலிஸாரின் எண்ணங்கள் மற்றும் சந்தேகம் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். ஆகவே இந்த அதிகாரத்தை நீதிமன்றத்துக்கு வழங்குங்கள் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கறுப்புப் பண சுத்திகரிப்பை தடுக்க வேண்டும், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண்டும், நிதிசார் கொடுக்கல் வாங்கலை அறிக்கையிட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். கடந்த காலங்களிலும் சிறந்த பல விடயங்களுக்கு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான வெளிப்படுத்தலை பொது கட்டமைப்பின் கீழ் கட்டாயப்படுத்தி அவற்றை வெளிப்படுத்துவதற்கு  முன்னரே நாங்கள் எமது சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சுய விருப்பின் அடிப்படையில் வெளிப்படுத்தினோம்.

பணதூயதாக்கல் நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். ஆனால் இந்த புதிய சட்டமூலத்தில் பொலிஸாருக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவை கிடையாது. பொலிஸ் சேவையில் 80000 உத்தியோகத்தர்கள் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் தனக்கு நற்சான்றிதழ் வழங்க முடியாது என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டம் இயற்றப்பட்டால் பொலிஸாருக்கு வரையறையற்ற அதிகாரம் வழங்கப்படும். இதனால் ஊழல் மோசடிகள் தீவிரமடையும் சாத்தியமும் தோற்றம் பெறும். இந்த அதிகாரம் மற்றும் பொறுப்பை நீதிமன்றத்துக்கு வழங்குங்கள் என்றே நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பணத்தூயதாக்கல் சட்டத்தின் பிரகாரம் எவரேனும் ஒருவரின் சொத்தை முதல் கட்டமாக 14 நாட்களுக்கும், அதன் பின்னர் 21 நாட்களுக்கும் முடக்க பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்படும். நீதிமன்றத்தின் அனுமதியை கூட பெறவேண்டிய அவசியம் இல்லை.

கடந்த அரசாங்கம் நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டு வந்தபோதும் அதிகாரத்தை நீதிமன்றத்துக்கு வழங்குங்கள், புதிய ஆணைக்குழு ஒன்றை நியமித்து அதற்கு அதிகாரங்களை வழங்க வேண்டாம் என்று குறிப்பிட்டோம். இதற்கு தற்போதைய ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆதரவளித்தார்கள்.

நிதி கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டமூலத்தில் 24ஆம் பிரிவுக்கமைய குழு ஒன்று நியமிக்கப்படும். இந்த குழு பாராளுமன்றத்துக்கு கூட பொறுப்புக்கூற கடமைப்படவில்லை. அமைச்சரவைக்கு மாத்திரம் அறிக்கையிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது முறையற்றது. எதிர்மறையான விளைவுகள் இதனால் ஏற்படும்.

அதேபோல் நிதி புலனாய்வு பிரிவுக்கும் எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்துக்கும் ஏதும் அறிவிக்க ஏற்பாடுகள் குறிப்பிடப்படவில்லை. புதிதாக உருவாக்கப்படும் கட்டமைப்புக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்படும்போது நாட்டில் கறுப்புச் சந்தை முறைமையே உருவாக்கும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகளால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எமது மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஒவ்வொரு வாரமும் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு  விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள்.

எமது கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களும் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள். தமது உறவுகள் பணம் அனுப்பினாலும் விசாரணைக்கு அழைக்கும் தன்மையே காணப்படுகிறது. இந்த சட்டமூலம் சட்டமானால் ஏதும் நடக்கலாம். பொலிஸாரின் சந்தேகத்தின் அடிப்படையில் சொத்துக்கள் மாதக்கணக்கில் முடக்கப்படலாம். நீதிமன்றத்தின் அனுமதியை பெறவேண்டிய தேவையில்லை.

வடக்கு மற்றும் கிழக்கில் எமது மக்கள் பொலிஸ், இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் நெருக்கடியில் வாழ்கிறார்கள். பொலிஸாரின் சந்தேகங்களால் பலர் பாதிக்கப்படலாம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்காது. அப்போது ஆட்சிக்கு வருபவர்கள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை சிந்தித்துப் பார்க்க  வேண்டும் என்றார்.