அரசாங்கப் பணிகளுக்கான ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் மனிதர்களின் ஆன்மீகத் தேடலுக்கான காலம் பறிபோவதாகவும், குறுகிய ஆயுட்காலத்தைக் கொண்ட மனிதன் உலகியல் செல்வங்களைத் தாண்டிய ஆன்மீகச் செல்வத்தையும் பேரறிவையும் தேடவேண்டிய அவசியத்தைக் கருத்திற் கொள்ள வேண்டும் என அஸ்கிரிய மகா விகாரைப் பிரிவின் அனுநாயக்க அதிபூஜ்ய வெடருவே உபாலி அனுநாயக்க தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாததும்பர ஸ்ரீ ஜினங்கலாராம சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் அண்மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்தர் உருவச்சிலை திறப்பு விழாவில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசு ஊழியர்கள் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, ஓய்வுபெறும் வயதெல்லையை மேலும் அதிகரிப்பது தொடர்பில் தற்போது சமூகத்தில் பல்வேறு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆன்மீக ரீதியாகவும் அறத்தின் வழியிலும் சிந்தித்துப் பார்த்தால், பழங்காலத்தில் மனிதர்கள் 120 ஆண்டுகள் வரை வாழ்ந்தார்கள். அதில் பாதியளவே 60 ஆண்டுகள் ஆகும். ஆனால், தற்காலத்தில் நூறு ஆண்டுகள் வரை வாழ்பவர்களைக் காண்பது மிக அரிது. இன்றைய மனிதர்கள் 70, 80 அல்லது 90 வயதிலேயே, அதாவது இரண்டு இலக்க எண்களிலேயே உலகை விட்டுப் பிரிந்து விடுகிறார்கள்.
இத்தகைய குறுகிய ஆயுட்காலத்தைக் கொண்ட மனிதன், 60 வயதிலும் ஓய்வுபெறாமல் 70 அல்லது 75 வயது வரை அரசாங்க வேலைகளிலேயே மூழ்கியிருந்தால், லௌகீகச் செல்வங்களைத் தாண்டிய ஆன்மீகச் செல்வத்தை எப்போது தேடப் போகிறான் என்ற கேள்வி எழுகிறது.
மனித வாழ்க்கையின் இறுதி மற்றும் மிக உயரிய செல்வம் ‘பிரஞை’ எனப்படும் உண்மையான பேரறிவாகும். அந்த உன்னத ஞானத்தைப் பெற வேண்டுமானால், அதற்குரிய தர்ம பூமி இருக்க வேண்டும்; அதற்கு நல்வழிகாட்ட ஆன்மீகத் துறவி ஒருவர் இருக்க வேண்டும்.
வாழ்க்கைக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் தொழில் செய்வதும் வியாபாரம் செய்வதும் அவசியம்தான் என்றாலும், அந்த உலகியல் தேடல்களிலேயே முழு நேரத்தையும் கழித்து வாழ்க்கையை முடித்துக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, மனிதர்கள் ஆன்மீகச் செல்வத்தைத் தேடுவதற்கான கால அவகாசம் பேணப்பட வேண்டும் என்றார்.




