டிஜிட்டல் மரணச் சான்றிதழ் வழங்கும் புதிய நடைமுறையை தொடங்கியது பதிவாளர் நாயகம் திணைக்களம்!

இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களம் டிஜிட்டல் மரண சான்றிதழ்களை வழங்கும் புதிய நடைமுறையை உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளது.

மின்னணு மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின்  கீழ், இப் புதிய நடவடிக்கை முதற்கட்டமாக களுத்துறை மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டு வந்த கையால் எழுதப்பட்ட சான்றிதழ்களுக்குப் பதிலாக, இனி கணினி அடிப்படையிலான தரவுத்தளத்தின் மூலம் மரண சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கப்படும்.

புதிய முறையில் வழங்கப்படும் ஒவ்வொரு மரண சான்றிதழிலும் ஒரு சிறப்பு QR குறியீடு இடம்பெற்றிருக்கும்.

இதன் மூலம் டிஜிட்டல் தளத்தின் வழியே சான்றிதழின் உண்மைத்தன்மையை யார் வேண்டுமானாலும் உடனடியாகச் சரிபார்க்க முடியும்.

இச்சான்றிதழ்கள் போலியாக உருவாக்கப்படுவதைத் தடுக்க, சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய தனித்துவமான தாளில் அச்சிடப்படுகின்றன.

தனிநபர்களின் தகவல்களை உடனுக்குடன் துல்லியமாகப் புதுப்பித்து பராமரிக்க அரசுக்கு வழிவகுக்கிறது.

அரசு மற்றும் பிற நிறுவனங்களுக்கு இடையேயான தகவல்கள் தடையின்றியும் விரைவாகவும் பரிமாறிக் கொள்ளப்படும்.

டிஜிட்டல் முறையில் தரவுகள் சேமிக்கப்படுவதால், தகவல்களின் பாதுகாப்பு மற்றும் இரகசியம் முழுமையாக உறுதி செய்யப்படுகிறது.