அரசாங்கத்தின் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை சிறுபோக நெல் அறுவடை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா நெல் கொள்வனவு நிலையத்திற்கு நேரில் விஜயம் செய்து, கொள்வனவுச் செயற்பாடுகள், நெல்லின் தரம் மற்றும் ஈரப்பத அளவு ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். என். எம். மனாஸ் அவர்களின் வழிகாட்டலிலும் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேசத்தின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த விவசாயிகள் தங்களது நெல் அறுவடைகளை அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம். எஸ். எம். நளீர், நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பெருந்திரளான உள்ளூர் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இடைத்தரகர்களின் சுரண்டல்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், தகுந்த நியாயமான விலையை உறுதி செய்யவும் அரசாங்கம் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. நெல் கொள்வனவுச் செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பிரதேச செயலாளர் இதன்போது அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும், தகுதிவாய்ந்த நெல்லைக் கொண்டுவந்து அரசாங்கத்தின் இந்த நன்மையைப் பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





