அரசியல் கூட்டணி குறித்து இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை – நாமல்

அரசியல் கூட்டணி குறித்து இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை. கடந்த காலங்களில் அவ்வாறு செயற்பட்டதால் தான் எமது கட்சி பலவீனமடைந்து வீழ்ச்சியடைந்தது. மீண்டும் அந்த தவறை செய்யப் போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் தமக்கு சாதகமான நிறுவனத்துக்கு நிதியளித்து ஜனாதிபதி மீதான மக்களின் நம்பிக்கையை ஆராய வேண்டிய அவசியம் கிடையாது.  மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பாராளுமன்ற செயற்குழு காலத்தை இழுத்தடிக்காமல் அறிக்கை சமர்ப்பித்தால் தேர்தல்கள் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்தும். அப்போது ஜனாதிபதி மீதான மக்களின் நம்பிக்கையை உறுதியாக அறிந்துகொள்ளலாம்.

அரசியல் கூட்டணி குறித்து இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை. கடந்த காலங்களில் அவ்வாறு செயற்பட்டதால் தான் எமது கட்சி பலவீனமடைந்து வீழ்ச்சியடைந்தது. மீண்டும் அந்த தவறை செய்யப் போவதில்லை.

அரசியல் கூட்டணி குறித்து வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். இனிவரும் காலங்களில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினால் அது குறித்து கவனம் செலுத்துவோம்.

கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து சிறந்த அரச நிர்வாகத்தை தொடரவே எதிர்பார்க்கிறோம் என்றார்.