கடும் மழையினால் சில நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெய்த கனமழையினால்,  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபைக்குச் சொந்தமான பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டியிருந்தது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின்  தலைவர் சந்தன பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (04) செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேராதெனியாவில் உள்ள மீவத்துர நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், மின்னணு அமைப்பிற்குள் நீர் புகுந்ததால் நேற்று (03) திங்கட்கிழமை பிற்பகல் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன எனவும், இதனால் சுமார் 40,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன எனவும் அவர் மேலும் கூறினார்.

எனினும், மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருவதால், மீவத்துர நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது முழுமையாக இயல்பு நிலைக்கு திருப்பப்பட்டுள்ளது .

மா ஓயா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக மாவனெல்ல மற்றும் அசுபினியெல்லவில் உள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மாவனெல்ல  நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது சரிசெய்யப்பட்டு, நீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும், அதே சமயம் அசுபினியெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்னும் செயல்படாத நிலையில் உள்ளது.

இதனால் கேகாலை மாவட்டத்தில் சுமார் 40,000 குடிநீர் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வெள்ளச் சூழல் கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களை மட்டுமே பாதித்துள்ளதாகவும், மேற்கு மாகாணம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை

வெள்ளச் சூழலால் ஆறுகளில் சேறும் , நீரின் கலங்கலும் அதிகரித்துள்ள போதிலும், நீர் முறையான சுத்திகரிப்புக்குப் பிறகே விநியோகிக்கப்படுவதால், அதன் தரம் குறித்து பொதுமக்கள் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொள்கிறது.