சிறைக்குள் உணவு உண்ண முடியவில்லை – அம்மாவுடன் பேச வேண்டும்! பிள்ளையானின் உருக்கமான கோரிக்கைகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04) காணொளி மூலம் விசாரணை நடைபெற்றது.

ஐந்து கொலைகள்

இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த 5 கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிற சந்தேக நபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள அவர் மீது, கல்லடி பகுதியில் நடந்த ஐந்து கொலைகள் மற்றும் நிலத்தகராறு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், வவுணதீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாகக் கொலை செய்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

2025ஆம் ஏப்ரல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனையும் 2025 நவம்பர் மாதம், காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரையும் சிஜடியினர் கைது செய்தனர்.

அதிகாரிகளின் சோதனை

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளில் தொடர்பு இருப்பதாக, பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி முகம் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜீன் 17ஆம் திகதி சிஜடியினர் வழக்கு தாக்கல் செய்தனர்.

 

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று  (04) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்களான பிள்ளையான், இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக (Zoom) முன்னிலைபடுத்தப்பட்டனர்.

இதன்போது பிள்ளையான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரராஜா முன்னிலையாகி பிள்ளையான் தற்போது வெலிசறை கடற்படை முகாம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிறைச்சாலையில் இருந்து செல்லும் உணவை அந்த முகாமில் இருக்கும் இராணுவம் மற்றும் கடற்படையினர் பரிசோதனை செய்து அனுப்பபடுவதால் அது சிதைவடைந்து செல்வதால் அதனை சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனவே, உணவை அவ்வாறு பரிசோதனை செய்யாது தருமாறும் 73 வயதான அவரது தாயார் சுகயீனமடைந்துள்ளதாகவும் அவருடன் கையடக்க தொலைபேசி ஊடாக 2 இல்லது 3 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி தருமாறும் கோரினார்.

இதன்போது, நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அங்கு எவ்வாறான நடமுறை உள்ளதோ அதை சரியாக பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகள்