காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

‘​காவிரி விவ​காரத்​தில் அனைத்​துக் கட்சி கூட்டம் தேவை​யில்​லை. அதனால் எந்​தப் பயனும் ஏற்​ப​டாது’ என்று சட்​டத்​துறை அமைச்​சர் நிர்​மல் குமார் தெரி​வித்​தார்.

இதுகுறித்து தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்​தில் 15 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட குடும்​பங்​களை வனப்​பகு​தி​யில் இருந்து வெளி​யேற்ற வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. அதை எதிர்த்து தமிழக அரசு சார்​பில் சீராய்வு மனு தாக்​கல் செய்​யப்​படும்.

அது​வரை மக்​களை வெளி​யேற்​றும் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​ப​டாது. பட்​ஜெட்​டில் பழைய திட்​டங்​களுக்கு ‘ஸ்​டிக்​கர்’ ஒட்​டப்​படு​வ​தாக எதிர்க்​கட்​சிகள் விமர்​சனம் செய்​கின்​றன. தமிழகத்​தில் பெரும்​பாலான திட்​டங்​கள் கடந்த 70 ஆண்​டு​களாகத் தொடர்ந்து செயல்​படுத்​தப்​பட்டு வருபவை​தான்.

நீதிக்​கட்சி கொண்​டு​வந்த உணவுத் திட்​டத்​தைத்​தான் அடுத்​தடுத்து வந்த அரசுகள் மேம்​படுத்​தின. தற்​போது 100 நாள் வேலை​வாய்ப்​புத் திட்​டத்தை தவெக அரசு 150 நாட்​களாக உயர்த்​தி​யுள்​ளது.

இந்த பட்​ஜெட் மக்​களைப் பாதிக்​காத​படி தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. நெல் மற்​றும் கரும்​புக்​கான ஆதார விலையை உயர்த்​து​வது குறித்து விவ​சா​யிகளிடம் முதல்​வர் ஆலோ​சித்து முடிவை அறி​விப்​பார்.

தாலிக்​குத் தங்​கம், பட்​டுப்​புடவை போன்ற ஏழைப் பெண்​களுக்​குப் பயனளிக்​கும் திட்​டங்​களை​யும் முதல்​வர் அறி​வித்​துள்​ளார்.

அதே​போல், அரசின் திட்​டங்​களுக்கு சொந்த பெயர்​கள் வைப்​ப​தை​விட பொது​வான பெயர்​கள் வைப்​பதே எங்​களின் நோக்​கம். அது தேவையற்ற குழப்​பங்​களைத் தவிர்க்​கும். தேர்​தல் வாக்​குறு​தி​கள் அனைத்து நிதி​நிலைமை சரிசெய்​யப்​பட்டு படிப்​படி​யாக நிறைவேற்றப்படும்.

காவிரி விவ​காரத்​தில் எங்​கள் கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் ஆலோ​சித்து முடி​வெடுத்து வரு​கிறோம். எந்​தக் காலத்​தி​லும் தமிழகத்​துக்கு தண்​ணீர் வந்​து​விடக்​கூ​டாது, முதல்​வர் விஜய்க்​குப் பெயர் கிடைத்​து​விடக்​கூ​டாது என்​ப​தில் திமுக மும்​முர​மாக உள்​ளது.

அவர்​களு​டன் இணைந்து அதி​முக​வும் செயல்​படு​கிறது. இவர்​களை அழைத்து அனைத்​துக்​கட்சி கூட்​டம் கூட்​டிப் பேசுவ​தால் எந்​தப் பயனும் இல்​லை. மின்​கட்டண அளவீடு குறித்து 1.60 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோருக்கு மறுகணக்​கீடு செய்து முடிக்​கப்​பட்​டுள்​ளது.

அதில் 1,200 இடங்​களில் மட்​டுமே தவறான கணக்​கீடு நடை​பெற்​றுள்​ளது. மறுக்​கணக்​கீடு குறித்​த முழுவிவரம்​ விரை​வில்​ வெளி​யிடப்​படும்​ என்றார்.