நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் கூடியது

கல்வித் தகைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) கடும் தர்க்கம் நிலவியது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருசிலர் தமது கல்வி சான்றிதழ்களை சபைக்கு சமர்ப்பித்தனர். நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் கூடியது.

இதன்பின்னர் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின்  போதே எம்.பி.க்களின் கல்வித்தகுதிகள் பற்றி அதிகம் பேசப்பட்டன.

இதன்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. யான  காவிந்த ஜெயவர்த்தன தனது கல்வி,பட்ட சான்றிதழ்களை காட்டி சபையில் உரையாற்றினார்.

அதேவேளை பிரதி  சபாநாயகர் ரிஸ்வி சாலி உரையாற்றுகையில், தான் ஒரு விசேட வைத்திய நிபுணர் அல்ல என்றும் தனது உத்தியோகபூர்வ கடிதங்களிலும், விசிட்டிங் கார்டுகளிலும், மருந்துச் சீட்டுகளிலும் அவ்வாறான தலைப்பைப் பயன்படுத்தியதில்லை என்றும்  தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை விசேட வைத்தியர் என்று அழைக்கக்கூடாது என்று நான் திட்டவட்டமாக கூறிஇருந்தேன் எனவும்  கூறினார்.

சர்வஜன அதிகாரத்தின் தலைவரான  திலித் ஜயவீர உரையாற்றுகையில்,  பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களுக்கு முன்னால் இருக்கும் கலாநிதி, பேராசிரியர், வைத்தியர் போன்ற தொழில் பட்டங்களை பயன்படுத்தி அழைப்பதை நீக்கினால் கீழ் நிலை அரசியலுக்கும் நல்லது. இல்லையென்றால் பட்டம், இல்லாதவர்களை இது சமுகத்தில் தள்ளி வைப்பதை போன்றது. இங்கே பேராசிரியர் என்பது பல்கலைக்கழகத்திற்கும் வைத்தியர் என்பது வைத்தியசாலைக்குமே பொருந்தும் என்றார்.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றுகையில் அரச தரப்பின் பிரதமகொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  முடிந்தால் எனது கல்விச் சான்றிதழ்களை வெளிப்படுத்துமாறு கூறினார். எனது கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் நாளை (இன்று புதன்கிழமை) சபைக்கு ஆற்றுப்படுத்துவேன் என்றார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான சமிந்ராணி கிரியெல்ல உரையாற்றுகையில் .இங்கு அரசதரப்பு எம்.பி. ஒருவர் எனது பரிஸ்டர் பட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பினார். அதற்கான அனைத்து சான்றிதழ்களும் என்னிடம் உள்ளன. என்னால் நான் கல்வி கற்ற பிரிட்டனிலுள்ள நீதிமன்றத்திலும் வாதாட முடியும். ஏனெனில்  நான் அங்கு பயிற்சியை நிறைவு செய்துள்ளேன். ஆனால் உங்கள் நீதி அமைச்சர்  அங்கு கற்றிருந்தாலும் அவரால் அங்குள்ள நீதிமன்றத்தில் வாதாட  முடியாது  என்றார்.

இதற்குப்பதிலளித்த  நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த பட்டம் அந்த நாட்டில் மட்டுமே செல்லுபடியாகும். அது பழையகால நடைமுறை .இப்போது அதனை பயன்படுத்த முடியாது. அது இங்கு பொருந்தாது .ஆனால் சிலர் அதனை இங்கு இப்போதும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக அஜித் பி.பெரேரா எம்..பி.பயன்படுத்துகின்றார் என்றார்.