அன்னை பூபதியின் நினைவு ஊர்தி திருகோணமலையை சென்றடைந்தது

அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16) காலை திருகோணமலை சிவன் கோவிலடியை சென்றடைந்தது.

இதன்போது பொதுமக்கள் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, தீபச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருகோணமலையின் முக்கிய பகுதிகளிலும் அவருடைய உருவப்படத்திற்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமான ஊர்திப் பவனியானது வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் முழுவதும் ஊர்வலமாக சென்று, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.