மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் இன்று செவ்வாய்கிழமை (17) காலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த நோய்காவு வண்டி (அம்பியுலான்ஸ்) அதே திசையில் எதிரே சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் மோதியுள்ளது.
இப்பாரிய விபத்துச் சம்பவத்தில் தெய்வாதீனமாக இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளதுடன், நோய்காவு வண்டியில் (அம்பியுலான்ஸ்) பயணித்த சாரதி உட்பட முன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
குறித்த நோய்காவு வண்டியில் (அம்பியுலான்ஸ்) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து புறப்பட்டு, களுவாஞ்சிகுடியில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றுக்காக சென்றவேளையிலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
பஸ்ஸில் பயணித்த பயணிகள் எவருக்கும் எந்தவித சேதமும் ஏற்படாத இந்நிலையில், நோய்காவு வண்டியில் (அம்பியுலான்ஸ்) பயணித்த சாரதி, விசேட தாதியர், மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருமாக மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
எனினும் நோய்காவு வண்டியின் (அம்பியுலான்ஸ்) முன்பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







