மானியம், நலன்புரி கொடுப்பனவை இடைநிறுத்தும் அரசின் தீர்மானத்தை நாணய நிதியம் மீள்பரிசீலிக்கவேண்டும்

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் யோசனைகளை முன்வைக்குமாறு நாணய நிதிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். மானியம் மற்றும் நலன்புரி கொடுப்பனவு வழங்கலை இடைநிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை நாணய நிதியம் மீள்பரிசீலிக்க வேண்டும் என்று நாணய நிதியத்தின் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இன்று கொழும்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைவாக எதிர்வரும் மாதம் முதல் அரசாங்கம் ஒருசில மானியம் மற்றும் நலன்புரி வழங்கலை இடைநிறுத்த தீர்மானித்துள்ளமை குறித்து  அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தோம்.

நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட செயற்திட்டத்துக்கமைய கடன் தொகையை பெற்றுக்கொள்வதற்காக ஒவ்வொரு மாதமும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைவாக மின்கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்என்பதை நாணய நிதியத்தின் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினோம்.

அரசாங்கத்தினால் இதுவரை காலமும் வழங்கப்பட்ட எரிபொருளுக்கான மானியம் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அவ்வாறு இடைநிறுத்தினால்எரிபொருள் விலையும், மின்சார கட்டணமும் மீண்டும் உயர்வடையும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் யோசனைகளை முன்வைக்குமாறு நாணய நிதிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மத்திய கிழக்கின் மோதல் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளதை தொடர்ந்து மசகு எண்ணெய் பீப்பாயின் விலை 75 டொலராக குறைவடைந்துள்ளது. ஆனால் எரிபொருள் விலை குறைப்பு குறித்து அரசாங்கம் இதுவரையில் எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை.  உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் அதன் பயனை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.