அரசாங்கத்தின் அரச வழக்குத் தொடுனர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்காகப் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர், யசந்த கோதாகொட தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அதிகாரங்கள் எவை, அரச வழக்குத் தொடுனர் அலுவலகத்தின் அதிகாரங்கள் எவை என்பது குறித்து கலந்துரையாடப்படுகிறது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஒருவரின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மாகாண அலுவலகங்களை நிறுவுவதற்கு ‘வளமான தேசம் – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தின் மூலம் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றக் கட்டமைப்பில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கான ஒரு பொறிமுறையாக, அரசாங்கத்தின் பிரதான அரச வழக்குத் தொடுனர் அலுவலகம் ஒன்றை நிறுவி, மாகாண மட்டத்தில் அதன் உப அலுவலகங்களை அமைப்பது முதன்மையான முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.இது தொடர்பாக ‘வளமான தேசம் – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்படி, அரசாங்கத்தின் அரச வழக்குத் தொடுனர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்காகப் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், தேவையான சந்தர்ப்பங்களில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காகவும் உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த நிபுணர் குழுவினால் இது தொடர்பான முன்மொழிவுகள் வழங்கப்படவுள்ளன. தற்போது இக்குழுவானது, சட்டமா அதிபரின் அதிகாரங்கள் எவை, அரச வழக்குத் தொடுனர் அலுவலகத்தின் அதிகாரங்கள் எவை என்பது குறித்து கலந்துரையாடி வருகின்றது.
‘வளமான தேசம் – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளவை ஐந்து வருட காலப்பகுதியில் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படும் வாக்குறுதிகளாகும் என்பதோடு, அந்தக் காலப்பகுதிக்குள் அவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதங்களுக்குக் காரணம் சட்டமா அதிபரின் தவறு அல்ல, மாறாக மனித வளம் மற்றும் தொழில்நுட்ப வளங்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணமாகும். இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான நியமனங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சட்ட அதிகாரிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வசதிகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.





