ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறா என வவுனியா மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ்.கிருஸ்ணதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா மாநகர சபை மேயர் வட மாகாண ஆளுநர் வேதநாயகனால் பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது,
இன்றைய நாட்களில், வவுனியாவில் பேசுபொருளாக இருப்பது, மாநகர சபை முதல்வரின் பதவி நீக்கம் பற்றிய விடயம்தான். இந்த விடயத்தில் ஆளுநர் மீது பலரும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தங்களது தவறுகளை மறைப்பதற்கும், ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கும் இவ்வாறான செயற்பாடுகளை செய்வது வழமைதானே. ஆனால், ஆளுநரினால் இவ்வாறானதொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது ஒன்றும் புதியதல்ல.
பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டில் வேறு இடங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெற்றுள்ளது. மாத்தளை மாநகர சபை முதல்வரும் இவ்வாறானதொரு விசாரணையின் பின்னர் மத்திய மாகாண ஆளுநரினால் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஒருவரும் எமது வட மாகாண முன்னாள் ஆளுநரால் பதவி நீக்கப்பட்டுள்ளார். அவ்வாறாயின் ஏனைய இடங்களில் அதிகாரம் இல்லாமலா அந்த ஆளுநர்களினால் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
இது போதாததற்கு முன்னாள் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவினால் வல்வெட்டித்துறை நகரசபையே கலைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இல்லாதவிடத்து ஆளுநருக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விக்னேஸ்வரன் ஐயா எந்த அரசாங்கத்திற்கு சார்பானவர்? முதலில் சட்டத்தை அறிந்துகொள்ளுங்கள்.
அதேபோலத்தான் வவுனியா மாநகர சபை விடயத்திலும், ஓய்வு பெற்ற நீதிபதியினால் ஆதாரங்கள் அனைத்தும் ஆராய்ந்து கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு சரியான விசாரணை நடாத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பித்த பின்னரும் கடந்த மூன்று மாதங்களாக சகல விடயங்களும் சரிபார்க்கப்பட்டு ஆளுநர் அவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்களது தவறுகளை, குற்றங்களை மறைப்பதற்காகவும் மக்களிடத்தில் தங்களை உத்தமர்களாகக் காட்டிக்கொள்ளவும் பொய்ப் பிரச்சாரங்களையும், ஆளுநர் மீது விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். அப்படி என்றால் யார் வேண்டுமானாலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடலாமா?
இவ்வாறானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறா? முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் ஏன் இத்தனை பேர் இந்த ஊழல்வாதிகளுக்கு வக்காளத்து வாங்குகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.
சில சமூக வலைத்தளங்களில் கூட இது தொடர்பான செய்திகள் மாற்றியமைக்கப்பட்டு, உண்மைகள் மறைக்கப்பட்டு ஊழல்வாதிகளுக்கு சார்பாகவே செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
வேதனையான விடயம் என்னவென்றால், பலர் உண்மை தெரியாமலே இந்த பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறுகின்றார்கள் என்பதுதான். இதில் யாரோ ஒருவரின் கருத்தைப் பார்த்தேன். அதில் அவர் சொல்கின்றார், ஓய்வு பெற்ற நீதிபதிக்கு வயது போய்விட்டதாம். எனவே அவரின் அறிக்கை சரியானதில்லையாம். எவ்வளவு கோமாளித்தனமாக இருக்கின்றது. என்னவென்று சொல்வது இவர்களை. உண்மைகள் ஒருபோதும் உறங்காது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





