ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் போலிப் பிரசாரத்தால் மக்கள் குழப்பமடைய தேவையில்லை. உழைக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்வகையில் அரசாங்கம் ஒருபோதும் செயற்படப்போவதில்லை என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை பொதுவான பொறிமுறையின் கீழ் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டு நிதியங்களையும் பொதுவான பொறிமுறையின் கீழ் நிர்வகிப்பதற்கான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக குழு ஒன்றை அமைப்பதற்கு கடந்த மாதம் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மூலம் இந்த இரண்டு நிதியங்களையும் கூட்டிணைப்பதற்கோ அல்லது பாதிப்பை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையல்ல. உலகம் பூராகவும் இந்த நிதியங்கள் கூட்டு பொறிமுறையின் கீழே நிர்வகிக்கப்படுகின்றன. குறிப்பக அரசாங்கம், ஊழியர்கள் மற்றும் முதலாளிமார் என்ற முற்தரப்பு கூட்டு பொறிமுறையின் கீழே நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த இரண்டு நிதியங்களையும் எவ்வாறு கூட்டு பொறிமுறையின் கீழ் நிர்வகிப்பது என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவே தொழில் அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் இந்த இரண்டு நிதியங்களும் தற்போது மூன்று நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. ஊழியர் சேமலாப நிதியத்தின் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் தொழில் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் நிதியம் மத்திய வங்கியினால் நிர்வகிக்கப்படுகிறது. அதேபோன்று ஊழியர் நம்பிக்கை நிதியம் நிதி அமைச்சின் கீழே செயற்பட்டு வருகிறது.
இவ்வாறு மூன்று நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுவதற்கு பதிலாக கூட்டு பொறிமுறையின் கீழ் நிர்வகிப்பதை இலக்காகக்கொண்ட அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளவே இந்த அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் தொழிற்சங்கங்களும் எதிர்க்கட்சியும் எமது வேலைத்திட்டம் தொடர்பில் எதுவும் தெரியாமல் இது தொடர்பில் பல்வேறு போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அதனால் இவர்களின் பிரசாரங்களும் மக்கள் அச்சப்பட தேவைையில்லை. இந்த அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் ஒருபோதும் மேற்கொள்ளப்போவதில்லை.
குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் இது தொடர்பில் தொழிற்சங்கங்கள், முதலாளிமாருடன் கலந்துரையாட எதிர்பார்க்கிறோம். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கமை பாராளுமன்ற உறுப்பினர்களையும் இது தொடர்பில் அறிவுறுத்தி, இதுதொர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவே எதிர்பார்க்கிறோம் என்றார்.





