முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் இரண்டாவது கட்டமாக இன்று (30) நடத்தி வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 37வது நாளினை எட்டியுள்ளது.
கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது.
தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
இந்நிலையில், போராட்டம் 37வது நாளைக் கடந்துள்ளபோதிலும் இதுவரை அதிகாரிகளிடமிருந்து எவ்வித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத சூழ்நிலையில், போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.




