சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் காணப்படக்கூடும்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் மோதல்களினால் ஏற்பட்டுள்ள வெளியக அழுத்தங்களின் விளைவாக இம்முறை சர்வதேச நாணய நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மீளாய்வின்போது இலங்கையினால் முன்னெடுக்கப்படவேண்டிய மறுசீரமைப்புக்கள் தொடர்பில் விதிக்கப்படும் நிபந்தனைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் காணப்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எதிர்வுகூறியுள்ளார்.

இலங்கை செய்திகள்

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுப்பதற்காகவும், மத்திய கிழக்கு மோதல்களினால் இலங்கையின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காகவும் வியாழக்கிழமை (26) நாட்டை வந்தடைந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர், இன்றைய தினத்திலிருந்து பரந்துபட்ட சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஏற்கனவே எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு, இயக்குநர் சபையின் ஒப்புதலுக்காக 2025 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் 2025 நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியினால் நாடு மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்ததை அடுத்து, துரித நிதியளிப்புத் திட்டத்தின்கீழ் 200 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குமாறு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் வேண்டுகோள் விடுத்தது.

அதனையடுத்து இதுபற்றி அறிவிப்பொன்றை வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பணிப்பாளர் எவான் பபஜோர்ஜியோ, துரித நிதியளிப்புத் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அவசர நிதியுதவிக் கோரிக்கைக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும், விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வைப் பூர்த்திசெய்வது பற்றிய கலந்துரையாடல்களை மீள ஆரம்பிப்பதற்கு 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமது அதிகாரிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகைதரும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதன் நீட்சியாக அண்மையில் இதுகுறித்துக் கருத்துரைத்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளை ஒன்றிணைத்து மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபையிடம் அனுமதிகோர உத்தேசித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் வியாழக்கிழமை (26) நாட்டுக்கு வருகைதந்திருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர், எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்த 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுப்பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் மோதல்களினால் ஏற்பட்டுள்ள வெளியக அழுத்தங்களின் விளைவாக இம்முறை சர்வதேச நாணய நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மீளாய்வின்போது இலங்கையினால் முன்னெடுக்கப்படவேண்டிய மறுசீரமைப்புக்கள் தொடர்பில் விதிக்கப்படும் நிபந்தனைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் காணப்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.