செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் சனிக்கிழமை (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
செம்மணி சமூக புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்கையில் தற்போது குவியல் குவியல்களாகவும் மனித எச்சங்கள் காணப்படும் நிலையில் அதற்கு மத்தியில் சிறுவர்கள் குழந்தைகளினதும் உடல் எச்சங்களோடு அவர்களின் பாவனை பொருட்களான பால் போத்தில், விளையாட்டு பொருட்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதில் வெளி வருவது படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல் பாகங்கள் மட்டுமல்ல அரச பயங்கரவாத சிங்கள பௌத்த பேரினவாத இராணுவ கட்டமைப்பின் தமிழ் இன கொலைவெறி உளவியலும், இனப்படுகொலை கோரத்தாண்டவத்தை வடிவமைத்த ஆட்சியாளர்களின் மிகவும் வக்கிர அரசியல் வெறி முகமும் சேர்ந்தே வெளிப்படுகின்றது.
இதுவரையான காலப்பகுதியில் 350 க்கும் அதிகமான என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது மன்னார் சதொச சமூக புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளையும் விட அதிகரித்து செல்லலாம் எனும் அச்சம் கலந்த பய உணர்வுக்குள்ளும் எமை தள்ளியுள்து.
மக்கள் விடுதலை முன்னணியின் 1988/89 கிளர்ச்சியை அடக்க ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரசு பயங்கரவாத இயந்திரமான பொலிசார், இராணுவத்தினரை மட்டுமல்ல மறைமுக கொலை குழுக்களையும் பாவித்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொன்று குவித்தது. அத்தோடு படலந்த போன்ற வதை முகாம்களையும் நடாத்தி சென்றதை அனைவரும் அறிவர்.
அன்று சூரியக் கந்தையில் பாடசாலை பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டமை மக்கள் மத்தியிலே பெரும் அச்சப் பீதியை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு நீதியை பெற்றுக் கொடுப்பதாக 1994 ஆட்சி பீடம் ஏறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தனது ஆட்சிக் காலத்தில் இறுதி வரையில் அந்த கொடூரத்துக்கான நீதியை பெற்றுக் கொடுக்கவில்லை.
சந்திரிகா அரசாங்கத்திற்கு முழு ஆதரவையும் கொடுத்த மக்கள் விடுதலை முன்னணி தங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரத்திற்கு சந்திரிக்கா கொடுத்த பகிரங்க வாக்குறுதியை நிறைவேற்றுமாறும் நீதியை பெற்றுக் கொட்டுக்குமாறும் கேட்கவில்லை. பின்வாங்கியமைக்கான காரணம் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இனப்படுகொலை யுத்தம் தடைபடக் கூடாது எனும் தங்கள் மனச்சாட்சியை கொன்ற கொலைவெறியே என்பதும் நாம் அறிந்ததே.
சந்திரிகா பண்டார நாயக்காவைத் தொடர்ந்து 1988/ 89 காலப்பகுதியில் நடந்த கொடூரத்தையும் மனித உரிமை மீறல்களையும் அறிக்கையாக தயாரித்துக்( ஊடகவியலாளர் திஸ்சநாயகம் தயாரித்து கொடுத்த) கொண்டு ஜெனீவா மனித உரிமை ஆணையகம் நோக்கி ஒடிய மகிந்த ராஜபக்சவின் பதவிக் காலத்தில் தாம் தாயாரித்த 1988/89 காலப்பகுதி கொடூரத்தின் அறிக்கைய திரும்பிப் பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல அரச பயங்கரவாதம் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இனப்படுகொலை யுத்தம் தடைபடும் என்பதற்காக மக்கள் விடுதலை முன்னணியும் அதற்கான எத்தகைய அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.
தற்போது தேசிய மக்கள் சக்திக்குள் மறைந்து நின்று ஆட்சி அதிகாரத்தை தமதாக்கிக் கொண்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணி தமது எந்த ஒரு தேர்தல் மேடைகளிலும் தாம் ஆட்சிக்கு வந்தால் 1988 /89 ஆம் காலப்பகுதியில் அடிமட்ட சிங்கள இளைஞர்களுக்கும் தமது கட்சிக்கும் எதிராக அரச பயங்கரவாதம் நிகழ்த்திய படுகொலைகளுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் என்று கூறவில்லை என்பதையும் தெற்கின் சமூகமும் முழு நாடும் அறிந்ததே.
இதற்குக் காரணம் அதற்கான நீதி விசாரணை என்றால் அரசு பயங்கரவாதம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலை இன அழிப்பு என்பவற்றோடு தொடரும் இன அழிப்பும் சர்வதேச நீதிக்கு உட்படுத்தப்படும் எனும் தம் மனச்சாட்சியை கொன்ற மனநிலை என்றே கூறலாம்.
தற்போதைய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஆட்சி காலத்திலேயே சர்வதேச தொலைக்காட்சி செய்தி ஊடகமான அல் ஜஸீரா படலந்தை வதை முகாம் தொடர்பான அறிக்கை விடயத்தினை வெளியிலே கொண்டு வந்தப் போது அவசர அவசரமாக அவ் அறிக்கையினை தூசு தட்டி எடுத்தவர்கள் தம்முடைய மனசாட்சியை கொன்றுவிட்டே அதனை மீண்டும் ஆழ்கிடங்குக்குள் வீசி எறிந்தனர்.
முழு நாடாக விசாக பண்டிகையை கொண்டாடிவிட்டு பொசன் பண்டிகைக்காக கொண்டாட பல்வேறு ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் தெற்கின் ஆட்சியாளர்களே, அரசியல் வாதிகளே, பௌத்த பொது மக்களே உங்கள் அரச பயங்கரவாதத்தின் இன அழிப்பால், இனப்படுகொலையால் அழிவுகளை மட்டுமே சந்தித்த தமிழ் இன சமூகமாக கேட்கின்றோம்.
தமிழர் தாயக பகுதிகளில் அகழப்பட்ட சமூக புதைகுழிகளை உற்றுப் பாருங்கள். தற்போது செம்மணி சமூக புதைகுழியில் கொன்று அல்லது உயிரோடு புதைக்கப்பட்ட அல்லது வீசப்பட்ட எங்கள் மழலைகளின் முகங்களையும் அவர்களின் குரல்களையும் கேளுங்கள். சித்திரவதைக்கு உடபடுத்தி கொல்லப்பட்டோரின் அவல குரல்களையும் கேளுங்கள். உங்களுக்கு தெற்கின் சமூக புதைகுழிகள் கண்ணுக்குத் தெரிவதோடு கொல்லப்பட்டோரும் அவர்களின் குடும்பங்களும் கண்ணாடிகள் உங்களுக்கு தெரிவர்.
அசோக சக்கரவர்த்தி தான் நிகழ்த்திய யுத்த கொடுமைகளின் காட்சியையும் அபலைகளின் அவலக் குரலூடனான கண்ணீரையும் பார்த்தும் கேட்டுமே தம் மனசாட்சியால் குத்த பட்டு பௌத்தத்தை தழுவியதாக உங்கள் பௌத்த வரலாறு கூறுவதாக நாம் கேட்டிருக்கின்றோம்.
அத்தகைய மனசாட்சியே இன்று ஆட்சியாளர்களுக்கு தேவை.அதுவே இனங்களை சுதந்திரமாக வாழ விடும்.அதுவே நாட்டுக்கு விடுதலையையும் சுபீட்சத்தையும் மட்டுமல்ல நீங்கள் எதிர்பார்க்கும் வளமான அழகான நாட்டையும் உருவாக்கும் என்பதையும் தெளிவாக கூற விரும்புகின்றோம் என்றார்.





