செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை (8) உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்னிடம் கேட்டுக்கொண்டதான தகவல்களை சோமரத்ன ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேவினால் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மூலம் கடிதம் ஒன்று தமக்கு அனுப்பி வைத்திருந்ததாகவும், அந்தக் கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே அனுப்பி வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதப் புதைகுழி தொடர்பில் எதனையும் கூற வேண்டாம் எனவும், பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே சோமரத்ன ராஜபக்ஷ வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றுதான் செம்மணியோடு சார்ந்த மக்கள் எல்லோரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
செம்மணி மனிதப் புதைகுழியுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைதுசெய்யப்படவேண்டும். அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இந்த உயரிய சபையின் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.





