திருகோணமலை கடற்படை சித்திரவதை முகாமிற்கு நீதவான் சென்று நேரில் பார்லையிட்டார்

திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள ‘கன்சைட்’  (Gun Site) எனப்படும் நிலத்தடி சிறைச்சாலையில், கடந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எஸ். எம். சம்சுதீன் புதன்கிழமை (17) குறித்த சிறைச்சாலைக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த விசாரணையின்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார். மேலும், விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையில், சம்பந்தப்பட்ட இடத்தின் காணொளிப் பதிவுகளையும் புகைப்படங்களையும் இணைத்துச் சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பதினொரு இளைஞர்களைக் கடத்திக் காணாமல் ஆக்கியமை மற்றும் பலரைக் கடத்திச் சித்திரவதை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாகவே, நீதிபதி இந்த கள விசாரணையை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வியாழக்கிழமை (18) அன்று முதல் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மேலதிக விசாரணைகளில் திருகோணமலை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.