திருகோணமலை – தென்னமரவடி மக்களது நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வாகப் புதிய பஸ் சேவை இன்று (18) வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திராவால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
‘பிரஜாசக்தி’ அமைப்பினூடாக மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முழுமையான ஆதரவுடனும் வழிகாட்டலுடனும் இப்பேருந்து சேவை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், விவசாயிகள், முதியவர்கள் மற்றும் குடும்பங்கள் தங்களது அன்றாடப் பயணங்களை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்வதற்கு இச்சேவை பெருமளவில் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது இப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார அன்றாட வாழ்வியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
போக்குவரத்துத் துறையில் இதுவொரு சிறிய படியாகத் தெரிந்தாலும், தென்னமரவடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இது மிகவும் அர்த்தமுள்ள மற்றும் வரவேற்கத்தக்கதொரு நகர்வாக அமைந்துள்ளது என்று பிரதேச மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.






