தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கொழும்பு வடக்கு நகர அலுவலகத்தின் ஏற்பாட்டில், வீடற்ற மற்றும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் இன்று (18) திங்கட்கிழமை கொழும்பு வடக்கு, நவகம்புர வட்டாரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் நேரடி அனுசரணையுடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான வீட்டுத்திட்டத்தின் ஒரு அங்கமாக கொழும்பு பகுதியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், கொழும்பு வடக்கு, நவகம்புர பகுதியில் மிகவும் அபாயகரமான நிலையில் வசித்து வந்த முருகையா மாதவன் என்பவரது குடும்பத்திற்கு புதிய வீடொன்றை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டும் விழா சுபவேளையில் நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வானது இந்து மத முறைப்படியான பூமி பூஜையை கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகர் ஆலய பிரதம குருக்கள் எஸ். ரவிச்சந்திர குருக்களினால் மிகவும் சிறப்பாக நடாத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கொழும்பு வடக்கு நகர அலுவலகத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஆர். எம். சுபசிங்க அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், முருகையா மாதவன் அவர்களின் தற்போதைய வீடு மிகவும் பழுதடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருந்தது என்றும், கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால் அவரது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதனைக் கருத்திற்கொண்டு, கௌரவ அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் களப்பரிசோதனையைத் தொடர்ந்து இத்திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், முருகையா மாதவன் போன்ற தேவையுடைய எளிய மக்களுக்கு நிலையான வீடொன்றை அமைப்பதற்காக அரசாங்கத்தினால் 10 இலட்சம் ரூபாய் (ரூ. 1,000,000) நிதியுதவி நன்கொடையாக வழங்கப்படுகிறது. முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட முருகையா மாதவனின் வீட்டினைப் புனரமைப்பதற்காக, வீடமைப்பு அதிகார சபையின் பங்களிப்புடன் இந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை மற்றும் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாண்புமிகு பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, நவகம்புர வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஏ.பி. செல்வம், பிரதேச செயலாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக, புதிய வீட்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட நிதியின் முதற்கட்ட தவணைப் பணம் பிரதி சபாநாயகரால் முருகையா மாதவன் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், புதிய வீட்டிற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய மாண்புமிகு பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்கள், இந்நிகழ்வு அனைவரது வாழ்விலும் ஒரு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான நாளாகும் எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள சமயத் தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள், திரு. மாதவன், திரு. செல்வம் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த நாள் திரு. மாதவன் அவர்களுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அவர்களது வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும் என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு நிலையான தங்குமிடம் அமைவதற்கான ஆரம்பமாக இந்நாள் அமைகின்றது என்றும் தெரிவித்தார்.
மேலும், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நற்பணி மிகவும் வெற்றிகரமான முறையில் நிறைவடைவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து வாழ்த்துவதோடு, இந்த வீடமைப்புப் பணிகள் மிக விரைவில் நிறைவுபெற்று, அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் இந்த புதிய இல்லத்தில் குடியேற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகக் கூறி, நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஏ.பி. செல்வம், தனது வட்டார மக்களுக்கு பெருமளவிலான சேவைகளை ஆற்றி வருவதாகக் குறிப்பிட்டதுடன், இன்னும் 6 மாத காலத்திற்குள் முழுமையான கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, புதிய வீடு பயனாளியிடம் கையளிக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில், கொழும்பு மத்திய பகுதியில், குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் மக்கள் மிகவும் சிறிய வீடுகளிலேயே வாழ்ந்து வருகிறார்கள் என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், அரசாங்கத்தின் அனுசரணையுடனும் வீடமைப்பு அதிகார சபையின் முழுமையான ஆதரவுடனும் இந்த நலன்புரித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன் இனம், மதம் அல்லது எவ்வித பாகுபாடுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்குவதில் எமது அரசாங்கம் பெருமிதம் கொள்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த வீட்டின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து, பயனாளியிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.








