நீதித்துறை நிறுவனங்களை சாதகமாக பயன்படுத்த முயற்சியா? – ஜகத் குமார கேள்வி

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அரசாங்கம் திடீரென உயர்த்துவது, தனது சொந்த பலவீனங்களை மறைத்துக் கொள்ளவும், எதிர்தரப்பினரை அடக்குவதற்கு நீதிமன்றங்கள், பொலிஸ் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் மேற்கொள்ளப்படும் முயற்சியோ என்ற பலத்த சந்தேகம் எழுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் தற்போது நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இது தொடர்பாக தவறான தகவல்களையும் அப்பட்டமான பொய்களையுமே கூறி வருகின்றனர். கடந்த காலங்களில் அனைவரது வயதும் உயர்த்தப்பட்டது போன்று நீதிபதிகளின் வயதையும் உயர்த்தப்போவதாகக் கூறி மக்களை திசைதிருப்பப் பார்க்கின்றனர்.

ஆனால், அரச சேவையில் நிலவும் ஆயிரக்கணக்கான வெற்றிடங்களை நிரப்பாமல், மேலாண்மை உதவியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காணாமல் நீதித்துறைப் பொறிமுறையின் திறனை அதிகரிக்க முடியாது. மறுபுறம் அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதில் பெரும் தாமதங்கள் நிலவுகின்றன. இவ்வாறான பிரதான நடைமுறைச் சிக்கல்களுக்கு எவ்வித தீர்வும் வழங்காமல், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்தியதால் மட்டும் வழக்குகள் விசாரிக்கப்படும் வேகமோ அல்லது பரிசீலிக்கப்படும் கோப்புகளின் எண்ணிக்கையோ அதிகரிக்கப் போவதில்லை.

நான் பாராளுமன்றத்தில் பொறுப்புள்ள அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான கண்காணிப்புக் குழுவின் தலைவராக செயற்பட்ட காலத்தில், நீதிச்சேவை ஆணைக்குழுவின் அறிக்கைகள் மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பது தொடர்பான தரவுகள் எனது குழுவின் ஆய்வுக்கு வந்தன. வழக்கு விசாரணைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து நாம் ஆராய்ந்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க வேண்டும் என்று நீதிச்சேவை ஆணைக்குழுவோ அல்லது வேறு எந்தவொரு தரப்போ கோரிக்கை விடுக்கவில்லை.

தற்போது கீழ் நீதிமன்றங்களிலேயே அதிகளவிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டுமாயின் நீதிபதிகளின் எண்ணிக்கையையும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையையுமே அதிகரிக்க வேண்டும். அதை விடுத்து, எவரும் கோராத வகையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அரசாங்கம் திடீரென உயர்த்துவது, தனது சொந்த பலவீனங்களை மறைத்துக் கொள்ளவும், எதிர்தரப்பினரை அடக்குவதற்கு நீதிமன்றங்கள், பொலிஸ் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் மேற்கொள்ளப்படும் முயற்சியோ என்ற பலத்த சந்தேகம் எழுகின்றது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒருவித மனரீதியான சலுகையை வழங்கி தம்வசம் வைத்துக்கொள்ள அரசாங்கம் முயல்கின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது. நீதிமன்றத்தின் மீதும் சட்டத்தின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை உடைந்தால் நாட்டில் பெரும் அராஜக நிலைமையே உருவாகும். எனவே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சட்ட அமைப்புகளும், மகாநாயக்க தேரர்களும் இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அரசாங்கம் அவசரப்பட்டு செயற்படாமல், பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்து அனைத்துப் தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று நிதானமாகச் செயற்பட வேண்டும் என்றார்.