நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யும் எந்த கலந்துரையாடலும் அரசாங்கத்துக்குள் இடம்பெறவில்லை. அதனை அனுமதித்துக்கொள்வதற்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தொடர்பில் அசித்த நிராேஷன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயம் அவரது தனிப்பட்ட கருத்தாகும் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மேல் மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கேட்டிருப்பதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அசித்த நிராேஷன் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.
தற்போது அதனை அனுமதித்துக்கொள்ள அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருக்கிறோம். அதேநேரம் இந்த தீர்மானம் தொடர்பில் தொடர்ந்தும் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.
ஆனால் நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்தை மீள பரிசீலனை செய்யும் எந்த கலந்துரையாடலும் அரசாங்கத்துக்குள் இடம்பெறவில்லை.
என்றாலும் அமைச்சரவைக்கு தற்போது அது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், அங்கு அது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கிறோம்.
அத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தொடர்பில் அசித்த நிராேஷன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவர்களின் அதிருப்தியை வெயிட்டிருந்ததை நான் கண்டேன்.
என்றாலும் அசித்த நிராேஷன் தெரிவித்த விடயம், அவரது தனிப்பட்ட கருத்தாகும். அது பொதுவாக கலந்துரையாடி தெரிவிக்கப்பட்ட விடயமல்ல.
அதனால் அவரது கருத்து அரசாங்கத்தின் கருத்தாக கருத முடியாது. எனவே அவர் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அது தொடர்பில் அறிவிப்பொன்றைை விடுப்பார் என நினைக்கிறேன் என்றார்.





