பிறக்கும் பராபவ வருடம் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழும் ஆண்டாக மலரவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இலங்கை இந்து மாமன்றம் இதனை தெரிவித்துள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்கள் இன்னுமொரு புத்தாண்டை வழமை போல் மீண்டும் பல்வேறு எதிர்ப்;பார்ப்புகளோடும், நம்பிக்கைகளோடும் வரவேற்கிறார்கள். கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக பல்வேறு துயரங்களையும் சந்தித்துக் கையறு நிலைக்கு வந்த எமது சமுதாயம் யுத்த அனர்த்தம் முடிந்து நிம்மதிப் பெருமூச்சு விடலாமென ஏங்கியபோது அதற்குப் பின்னரான காலமும் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்தும் சோதனைகளையும் வேதனைகளையும் தந்தவண்ணம் உள்ளது. “சாணேற முழம் சறுக்கும்” என்ற பழமொழி ஈழத்தமிழ் மக்களுக்கே உரித்தானதாகவுள்ளது.
மேலும் கடந்த வருடத்தில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுப் பலர் குறிப்பாக மலையகத்தைச் சார்ந்த மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்தார்கள், இன்னமும் சொல்லொணா வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் முகங்கொடுத்து எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மலரும் புத்தாண்டு நல்வாழ்வைக் கொண்டு வரவேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
சமயப்பணியுடன் சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வரும் இந்து மாமன்றம் தமிழ் மக்களுக்கு எங்கெல்லாம் வேதனைகள் சோதனைகள் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் உதவி செய்து வந்திருக்கின்றது.
தமிழ் மக்களது வாழ்நாளில் தொடரும் துயரநிலை முற்றாக நீங்கி, உதயமாகும் பராபவ புத்தாண்டில் சுயநிர்ணய உரிமையுடனான ஒளிமயமானதொரு எதிர்காலம் எம்மக்களுக்கு கிட்ட, இந்த அரசாவது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென எல்லாம் வல்ல சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானைப் பிரார்த்திக்கின்றோம்.




