மன அழுத்தத்தின் உச்சக்கட்டமே இந்த சிறைச்சாலை மோதல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 25 பேர் வரை உயிரிழந்துள்ள சம்பவத்தை மூடிமறைக்காமல், பாதாள உலகக் குழுக்களின் மோதல் என்ற போலி வதந்திகளைப் பரப்புவதை நிறுத்திவிட்டு அரசாங்கம் உடனடியாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே எச்சரித்துள்ளார்.

கொழும்பில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட பல நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு வேளையில் ஏற்பட்ட மோதலில் வெறும் 2 பேர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில், 24 மணித்தியாலங்கள் கடந்தும் இதுவரையில் அரசாங்கமோ அல்லது சிறைச்சாலைகள் திணைக்களமோ எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை. நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறியதால் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஐ நெருங்கியுள்ளது.

உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடாமல், இது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் 2 பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல் என்ற கதைகளை அரசாங்கம் பரப்பி விடுகின்றது. இவ்வாறான வதந்திகளால் சிறைக்கைதிகளின் உறவினர்கள் அச்சமடைந்து சிறைச்சாலையைச் சூழத் திரண்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்த பின்னர், தான் நீதி அமைச்சர் என்பதால் இதற்குப் பொறுப்பேற்பதாகக் கூறிக்கொண்டு நீர்கொழும்புக்குச் செல்வது தீர்வாகாது. அரசாங்கம் நாட்டுக்கு உண்மையைக் கூற வேண்டும்.

உண்மையில் இலங்கையின் சிறைச்சாலைகளுக்குள் மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலையே நிலவுகிறது. அங்கு தடுத்து வைக்கக்கூடிய கொள்ளளவை விட 3 மடங்கு அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக 200 பேர் இருக்க வேண்டிய அறையில் 600 பேர் வரை அடைக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள கைதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் எப்பொழுதும் ஒரு விரக்தியும் மன அழுத்தமும் காணப்படுகின்றது. இதன் உச்சக்கட்டமே இந்த மோதலாகும்.

கடந்த அரசாங்கங்களின் நீதியை நிலைநாட்டுதல் திட்டமாக இருந்தாலும் சரி, தற்போதைய அரசாங்கத்தின் போதைப்பொருள் ஒழிப்பாக இருந்தாலும் சரி, அவர்கள் பெரும் கடத்தல்காரர்களையோ அல்லது முக்கிய சூத்திரதாரிகளையோ கைது செய்யவில்லை. கீழ்மட்டத்திலுள்ள பாவனையாளர்களை மட்டும் கொத்துக் கொத்தாகக் கைது செய்து சிறைகளை நிரப்பி, நெருக்கடியை அதிகரித்தனர். இதன் மூலவேரை அறுத்தெறியாமல் செய்த வெறும் காட்சிப் படுத்தல்களின் விளைவையே நாம் தற்போது அறுவடை செய்கிறோம். இதற்கு அரசாங்கம் கண்டிப்பாகப் பதிலளிக்க வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகள்