மாதம்பே பகுதியில் ஐந்து வயதுடைய முன்பள்ளி மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 65 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
மாதம்பே, கருக்குவட்டாவ பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மாதம்பே பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சந்தேகநபருக்குச் சொந்தமான சில்லறை விற்பனை கடைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, அந்தச் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடையின் உள்பகுதிக்கு அழைத்துச் சென்று சந்தேகநபர் இந்த துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாதம்பே பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.





