பத்திரிகையாளர் சபேஸ்வரனின் மறைவு ஈழத்தமிழர் ஊடகத் துறைக்குப் பேரிழப்பு: சிறீதரன்

இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த பத்திரிகையாளர் ஆறுமுகராசா சபேஸ்வரனின் (சபேசன்) மறைவு ஈழத்தமிழர் ஊடகத் துறைக்குப் பேரிழப்பாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) இரங்கல் செய்திக் குறிப்பொன்னறை வெளியிட்டுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,      

சிறீலங்கா அரசினால் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போரின் பேரழிவுகளையும், மனித உரிமை மீறல்களையும் உயிராபத்தான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வெளி உலகிற்குத் துணிவுடன் கொண்டு வந்தவர். ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த அரசியல் தளத்தில் உறுதியோடு நின்று தமது பேனாவை ஆயுதமாக ஏந்திக் களத்தில் நிற்கும் ஒரு செய்தியாளராகப் போராடியவர் அமரர் சபேசன்.

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சூழலிலும் அஞ்சாது களத்தில் நின்று பணியாற்றியதுடன் யாழ். ஊடக அமையத்தின் தலைவராகவிருந்து தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். தனது மும்மொழி ஆற்றலால் சர்வதேச ஊடகங்களுக்கும் ஈழத் தமிழர்களின் அவலக் குரலைத் துல்லியமாகக் கடத்தியவர்.
போர்க் காலத்திலும், அதன் பின்னரான நெருக்கடிகளிலும் தமிழ்மக்களின் குரலாகவும், ஊடகத்துறைக்கே முதுகெலும்பாகவும் திகழ்ந்த ஒரு காத்திரமான ஆளுமையை இன்று நாம் இழந்து நிற்கின்றோம். அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுப் பதிவுகளில் என்றும் நிலைத்திருக்கும். ஊடகப் போராளி சபேசனுக்கு எனது புகழஞ்சலிகளைத் தெரிவிப்பதுடன் அவரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றேன் எனவும் அந்த இரங்கல் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.