மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு

வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், சிறைச்சாலை அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டும் என உயிரிழந்தவரின் உறவினர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட கொடூரமான தாக்குதலே இந்த மரணத்துக்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக உயிரிழந்த நபரின் உறவினர்கள் திங்கட்கிழமை (4) பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த உயிரிழந்தவரின் சகோதரி, இடம்பெற்ற சம்பவங்களை கண்ணீருடன் விவரித்தார்.

எனது சகோதரன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழேயே கைது செய்யப்பட்டார். இதன்போது நீதிமன்றம் அவருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டது. ஆனால், அவர் திருந்தி வர வேண்டும் என்ற நோக்கத்தில், நான் அந்தப் பணத்தைச் செலுத்தவில்லை. அதன் காரணமாக நீதிமன்றம் அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது.  இம்மாதம் 26 ஆம் திகதி  அவரது தண்டனைக்காலம் நிறைவடைய உள்ளது.

சிறைச்சாலை  வைத்தியசாலையில் உயிரிழந்த தனது சகோதரனின் உடலைப் பார்த்தபோது, அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார். தப்பிச் செல்ல முயன்றார் என்பதற்காக, ஒருவரை இவ்வளவு கொடூரமாகத் தாக்க முடியாது. பொரளையில் உள்ள பல பொதுமக்கள், சிறைச்சாலை  அதிகாரிகள் அவரைத் தாக்கி மீண்டும் சிறைக்கு இழுத்துச் சென்றதை நேரில் பார்த்துள்ளனர். மனித உரிமைகளை முற்றாக மீறும் வகையில் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. இந்த அநீதியான மரணத்துக்கு உரிய விசாரணை நடத்தப்பட்டு தங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றார்.