வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தை கிளிநொச்சியில் அமைக்க நடவடிக்கை!

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கான பணிகள் தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெறுகிறது. நிர்மாண பணிகள் மாகாண ஆளுநரின் இறுதி பரிந்துரைகளை எதிர்பார்த்துள்ளோம் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற அமர்வின் போது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றியதாவது,

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தை கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்வது தொடர்பாக தங்களுடைய உடனடி தலையீட்டை கோருகின்றேன். வடக்கு மாகாண ஆளுநரால் இதனை கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதனால் வன்னி மாவட்ட மற்றும் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு வீரர்கள்,பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு கழகங்கள் தமது நிர்வாக தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வன்னி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால் இந்த இடமாற்றத்தை உடனடியாக சாத்தியமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தை கிளிநொச்சியில் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இறுதி பரிந்துரை ஆளுநரால் வழங்கப்படவில்லை.

எவ்வாறாயினும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்ட பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பில் ஆளுநர் உத்தரவு வழங்கியதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக காலப்பகுதியை உடனடியாக கூற முடியாது. இதேவேளை வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் வழங்கப்படும் என்றார்.