வட்டவளையில் கடந்த 4 நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சி பதிவு

கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் வட்டவளைப் பகுதியில் மொத்தமாக 661 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

நேற்று (03) திங்கட்கிழமை ஒரே நாளில் வட்டவளையில் 204 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது அந்நாளில் நாட்டில் பதிவான மிக அதிகளவான மழைவீழ்ச்சியாகும்.

அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் கடந்த மூன்று நாட்களில் 150 மில்லி மீற்றர் முதல் 500 மில்லி மீற்றர் வரையிலான மிகக் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் குறுகிய காலத்தில் அதிக தீவிரமான மழைவீழ்ச்சி பெய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.

எனினும், கடந்த காலங்களில் ஏற்பட்ட தித்வா சூறாவளி நிலவிய காலப்பகுதியுடன் தற்போதைய சூழ்நிலையை ஒப்பிட முடியாது எனவும், அக்காலகட்டத்தில் இதைவிட மிக அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.

மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாகக் கற்பாறைகள் சரிதல் மற்றும் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

எனவே, அபாயகரமான மலைபாங்கான பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், அரச அதிகாரிகளால் அவ்வப்போது வெளியிடப்படும் உத்தியோகபூர்வ வானிலை மற்றும் மண்சரிவு எச்சரிக்கை வழிகாட்டல்களைக் கண்டிப்புடன் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.