மதுரை மீனாட்சி அம்மன் கோயி லுக்கு வரும் விஐபிகளுக்கு இடையூறாக இருப்பதால் கிழக்கு பகுதியில் அம்மன் சந்நிதி நுழைவுவாயில் அருகிலுள்ள பொருட்கள் காப்பகத்தை தெற்கு சித்திரை வீதிக்கு மாற்றும் நடவடிக்கைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மதுரை நகரின் பெரும்பகுதி வர்த்தகம் இக்கோயிலை மையப்படுத்தி வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே உள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவுப் படி கோயிலுக்குள் செல் போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்ட பிறகு, பக்தர்கள் கொண்டுவரும் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்கும் வகையில் பொருட்கள் காப்பகம், காலணிகள் காப்பகம் நான்கு சித்திரை வீதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கிழக்கு சித்திரை வீதியில்தான் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.
இந்நிலையில் அம்மன் சந்நிதி வாசல் அருகிலுள்ள பொருட்கள் காப்பகத்துக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தால் விஐபிகள் வருகையின்போது இடையூறு ஏற்படுவதாக போலீஸாரின் ஆலோசனையை ஏற்று அங்கிருந்த பொருட்கள் காப்பகத்தை இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி தெற்கு சித்திரை வீதியில் புதிதாக பொருட்கள் காப்பகம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். விஐபிகளுக்காக பக்தர்களை சிரமப்படுத்தும் செயலை கோயில் நிர்வாகம் கைவிட வேண்டும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனும், சுவாமியும் கிழக்கு நோக்கியே உள்ளதால் கிழக்கு வாசல் வழியாகவும், அருகிலுள்ள அம்மன் சந்நிதி வழியாகவும்தான் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதை விரும்புவார்கள்.
இதனால் மற்ற வாசல்களைவிட இங்குதான் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அதனை கருத்தில் கொண்டுதான் கிழக்கு சித்திரை வீதியில் 2 இடங்களில் பொருட்கள் மற்றும் காலணி காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

அம்மன் சந்நிதி வாசல் அருகே தற்போது செயல்படும் காலணி காப்பகம் முன்பாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
மேலும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய விஐபிகளும் அம்மன் சந்நிதி வாசல் வழியாகத்தான் அழைத்துச் செல்லப்படுகின்றனர். வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் நடப்பதால் கிழக்கு வாசல் ஏற்கெனவே அடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்தர்கள் கூட்டத்தால் விஐபிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அம்மன் சந்நிதி வாசல் அருகிலுள்ள பொருட்கள் காப்பகத்தை தெற்கு சித்திரை வீதிக்கு மாற்றுவது கண்டிக்கத்தக்கது.
தெற்கு சித்திரை வீதியில் சென்று காலணிகளை கொடுத்துவிட்டு பக்தர்கள் வெறுங்கால்களுடன் அம்மன் சந்நிதி வாயிலுக்கு நடந்துவர மாட்டார்கள் என்ற திட்டத்துடன் இது செயல்படுத்தப்படுகிறது. அம்மன் சந்நிதி வாசலை விஐபிகளுக்காக மட்டும் என மாற்ற திட்டமிட் டுள்ளது போல் இந்நடவடிக்கை உள்ளது.
பக்தர்கள் கூட்டம் இல்லாத பகுதியில்தான் விஐபிகளை அழைத்துவர வேண்டுமானால் கூட்டம் குறைவாக வரும் வடக்கு வாசல் வழியாக அவர்களை காரிலேயே அழைத்துச் செல்லலாம்.
விஐபிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் கோயில், காவல் துறை நிர்வாகங்கள் சாமானிய பக்தர்களின் பக்திக்கும் மதிப்ப ளித்து அம்மன் சந்நிதி வாசல் அருகிலுள்ள காப்பகத்தை அதே இடத்திலேயே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், என்றனர்.




