தங்களுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியையும் அவரது பாரம்பரியத்தையும் கவுரவிக்கும் நோக்கில் அவரது இறுதிப் பேரணியில் லட்சக்கணக்கான ஈரானியர்கள் பெருமையுடனும் ஒற்றுமையுடனும் ஒன்றுகூடினர். அவர்களோ ஈரானின் வீரமிக்க ஆயுதப்படைகளோ எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை.
அமெரிக்கா ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ஈரான் – அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 13-வது பிரிவு ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளது. அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் இறுதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாது என்பதே அது. எனவே, அமெரிக்கா ஒப்பந்தத்தை மதித்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் கூடியிருந்த ஈரானிய தலைவர்களை ஒரே குண்டில் அமெரிக்காவால் கொல்ல முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி இருந்தார்.
இந்த இறுதிச் சடங்கு ஊர்வலங்கள் குறித்து கடந்த 5-ம் தேதி அவர் அளித்த பேட்டியில், “கமேனியை மக்கள் வெறுப்பதாகவே நான் நினைத்தேன், அங்கு மக்கள் சிந்துவது போலி கண்ணீராக இருக்கலாம். அங்கு ஈரானின் ஒட்டுமொத்த முக்கிய தலைமைகளும் கூடியுள்ளனர். நான் நினைத்தால் ஒரே குண்டில் அவர்கள் அனைவரையும் வீழ்த்திவிட முடியும். ஆனால், நாம் அதைச் செய்யப் போவதில்லை; ஏனெனில், அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கே எவரும் இருக்க மாட்டார்கள்” என்று ஏளனமாகக் கூறி இருந்தார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அரசு சார்பில் மிக பிரம்மாண்டமான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈரானின் தற்போதைய முக்கிய தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். டெஹ்ரானில் ஜூலை 4-ம் தேதி தொடங்கிய இறுதிச் சடங்குகள், அயதுல்லா அலி கமேனியின் சொந்த ஊரான மஷாத்தில் ஜூலை 9-ம் தேதி உடல் நல்லடக்கம் செய்யப்படுவதுடன் நிறைவடைகிறது.



