இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அமைந்துள்ள தீஸ்தா நீர்மின் திட்டச் சுரங்கம் இடிந்துவிழுந்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 15 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நாம்சி மாவட்டத்தின் சாமர்டுங் பகுதியில் அமைந்துள்ள தேசிய நீர்மின் உற்பத்திக் கழகத்தின் தீஸ்தா கட்டம்–6 நீர்மின் திட்டத்தின் கட்டுமானச் சுரங்கத்தில் திங்கட்கிழமை (20) பிற்பகல் 1.04 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பாறை இடுக்குகளில் தேங்கியிருந்த மீத்தேன் வாயு திடீரென வெளியேறி வெடித்ததன் காரணமாக சுரங்கம் முழுவதும் நச்சுப் புகை மற்றும் அபாயகரமான வாயுக்கள் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நேரத்தில் சுரங்கத்திற்குள் சுமார் 25 தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்த நிலையில், இதுவரை 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 15 பேரைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரங்கத்திற்குள் மீத்தேன், கார்பன் மோனாக்சைட்டு மற்றும் ஹைட்ரஜன் சல்பைட்டு போன்ற நச்சு வாயுக்கள் அதிகளவில் காணப்படுவதால், மீட்புக் குழுவினர் ஒட்சிசன் உருளைகள் மற்றும் விசேட சுவாசக் கருவிகளின் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங்குடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்ததுடன், மத்திய அரசின் முழுமையான உதவியை உறுதியளித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.





